‘வயக்காட்டு பொம்மைகள்’ என அதிமுக உறுப்பினர் பேசியதை அவைக் குறிப்பி லிருந்து நீக்கக்கோரி திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவை அலுவல் முடங்கியது. இதையடுத்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.முத்தையா (பரமக்குடி), ‘‘89 வயக்காட்டு பொம்மைகள் இருக்கின்றனர். அதைப் பார்த்து கொக்குகளும், குருவிகளும் பயப் படலாம். சீறும் சிங்கங்கள் பயப்படாது’’ என்றார்.
உறுப்பினரின் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ‘‘வயக்காட்டு பொம்மை என்ற வார்த்தை பயன்படுத்தக் கூடாத வார்த்தையோ, தவறான வார்த்தையோ அல்ல. அதிமுக உறுப்பினர் யாருடைய பெயரையும் குறிப்பிடாதபோது எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஏன் இப்படி சத்தம் போடுகிறார்கள் என்பது புரிய வில்லை’’ என்றார்.
ஆனாலும், அதிமுக உறுப்பினரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய பேரவைத் தலைவர் ப.தனபால், ‘‘அதிமுக உறுப்பினர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தவறான வார்த்தையை பேசவில்லை. இதுபற்றி முதல்வர் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டார். எனவே, அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை என தீர்ப்பளிக்கிறேன்’’ என்றார்.
இதை ஏற்க மறுத்த திமுக உறுப்பி னர்கள், தொடர்ந்து அமளியில் ஈடுபட் டனர். பேரவைத் தலைவரைக் கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
மீண்டும் குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ‘‘அதிமுக உறுப்பினர், வயலில் இருக்கும் வயக்காட்டு பொம்மைகளைப் பற்றிதான் பேசினார். இது தங்களைத்தான் குறிக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை’’ என்றார்.
பேரவைத் தலைவர், ‘‘இந்தப் பிரச்சினையில் நான் ஒரு தீர்ப்பு அளித்துவிட்டேன். பேரவைத் தலைவர் ஒரு பொருள் குறித்து தீர்ப்பளித்து விட்டால் அதுகுறித்து பேசக்கூடாது என்பது விதியாகும். எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேரத்தை வீணடிக்காமல் அவையை நடத்த ஒத்துழைக்க வேண்டும்’’ எனக் கூறி மின் துறை அமைச்சர் பி.தங்கமணியை பதிலுரை வழங்குமாறு அழைத்தார்.
அமைச்சர் தனது பேச்சை தொடங்கி னார். ஆனால், அவரை பேச விடாமல் திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு பேச வாய்ப்பு தருமாறு கோரினார். இந்த விவகாரம் தவிர வேறு ஏதாவது பேசுவதாக இருந்தால் அனுமதி தருகிறேன் என பேரவைத் தலைவர் கூறினார். அப்போது பேசிய ஸ்டாலின், ஒரு கருத்தை தெரிவித்தார். அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் பேரவைத் தலை வரை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது பேசிய பேரவைத் தலைவர், ‘‘என்னை வசைபாடி எவ்வளவு நேரம் கோஷமிட்டாலும் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன். இந்த விவகாரம் குறித்து பேச அனுமதிக்கவும் முடியாது’’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.
பகல் 1.20 மணிக்கு தொடங்கிய அமளி, 2.10 மணி வரை நீடித்தது. இதனால், பகல் 2.10 மணிக்கு அவையை ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். ‘‘திமுக உறுப்பினர்கள் அவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுகின்றனர். மக்கள் பிரச்சினையை பேச வேண்டியவர்கள் வேண்டுமென்றே அவையின் நேரம் முடிந்துவிட்டதால் பேரவையின் இன்றைய நிகழ்வுகளை இத்துடன் ஒத்திவைக்கிறேன். மின்துறை அமைச்சர் நாளை (4-ம் தேதி) பதிலுரை வழங்குவார்’’ என பேரவைத் தலைவர் அறிவித்தார்.
திமுக உறுப்பினர்கள் வெளியேறாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பகல் 2.14 மணிக்கு உள்ளிருப்புப் போராட்டத்தை முடித்துக் கொண்டு திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர்.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.