வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. பிற்பகல் 2 மணிக்குமேல் படிப்படியாக குறைந்து, மாலை 4 மணிக்கு மேல் வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் கோடைக் காலம் தொடங்கும் முன்பே வெயில் அளவு 100 டிகிரியைத் தாண்டியது. கடந்த மார்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வரை 100 டிகிரியை தொட்டு வந்த வெயில் அளவு, ஏப்ரல் 7-ம் தேதி 106 டிகிரியாக பதிவானது. இதையடுத்து, 103, 106 டிகிரியாக பதிவாகி வந்த வெயில் அளவு, ஏப்ரல் 17-ம் தேதி 110.3 டிகிரியும், ஏப்ரல் 18-ம் தேதி 109.4 டிகிரியாக பதிவானது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கோடைக் காலத் தில் பதிவாக வேண்டிய வெயில் அளவு, மார்ச், ஏப்ரல் மாதங்களில் பதிவானதால், வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இந்நிலையில், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. நண்பகல் 12 மணி அளவில் அனல் காற்று வீசியது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.
திடீரென பிற்பகல் 2 மணிக்கு மேல் வானில் மேக மூட்டம் சூழ்ந்ததால், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. மாலை 4 மணி அளவில் வேலூர், காட்பாடி மற்றும் சத்துவாச்சாரி பகுதிகளில் மழை பெய்தது. 15 நிமிடங்களுக்கு பெய்த லேசான மழையால் வேலூரில் குளிர்ந்து காற்று வீசியது. கடந்த ஒரு மாதமாக வெயிலின் கொடுமையை அனுபவித்து வந்த மக்களுக்கு இது மகிழ்ச்சியை அளித்தது.
அதேபோல், குடியாத்தம், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. வாணியம்பாடியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பங்களும் மரங்களும் சாய்ந்தன. வாணியம்பாடி அடுத்த மாதக்கடப்பா மலைப் பகுதியைச் சேர்ந்த உமாபதி என்பவரின் வீட்டின் மீது இடி தாக்கியது. இதில், அவரது வீட்டின் முன்பக்கம் ‘சிலாப்’ இடிந்து விழுந்தது. இதில், உமாபதியும், அவரது மகன் விஜய்யும் படுகாயமடைந்தனர். உடனே, அவர்கள் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், நாட்றாம்பள்ளியில் இடியுடன் கூடிய மழை பெய்த தால், சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இந்நிலையில், நாட்றாம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவர் தனது காருக்கு எரிபொருள் நிரப்ப, நாட்றாம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள பெட்ரோல் பங்க்குக்கு நேற்று மாலை வந்தார்.
பெட்ரோலை நிரப்பிவிட்டு மரத்தின் நிழலில் காரை நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்றார். அப்போது, பலத்த காற்று வீசியதால் அங்குள்ள புளியமரம் வேரோடு சாய்ந்து, நின்றிருந்த கார் மீது விழுந்தது. இதில், கார் சேதமடைந்தது.
தி.மலையில் வெயிலுக்கு தொழிலாளி பலி
திருவண்ணாமலையில் வெயில் கொடுமையால் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (53). திருவண்ணாமலை மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை மார்க்கெட்டில் வழக்கமான பணியில் ஈடுபட்டார். பின்னர், காலை 10 மணி அளவில் வீடு திரும்பினார்.
இதற்கிடையில், நேற்று காலை 11.30 மணி அளவில் வீட்டிலிருந்து பக்கத்துக்கு தெருவுக்கு நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அந்த வழியாகச் சென்ற சிலர் அவரை மீட்டு தண்ணீர் கொடுக்க முயன்றனர். ஆனால், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.