எனது ராஜதந்திரத்தால் தான் திமுக ஆட்சிக்கு வரவில்லை என்று நான் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. நான் கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி வாளாடியில் நடைபெற்றது. மதிமுக புறநகர் பொறுப்பாளர் சேரன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் வைகோ பேசினார்.
திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு நான் ராஜதந்திரியாக இருந்ததுதான் காரணம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்ததாக புதன்கிழமை செய்தி வெளியாகியது. இதற்கு வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ கூறியதாவது:
''சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைக்க நான் எடுத்த முயற்சி தோற்கவில்லை. ஆனால், தேர்தலில் தோற்றுவிட்டோம். ராஜதந்திரத்தில் மிகத் திறமையானவர் கருணாநிதி. அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு முடிவு எடுக்கிறார். அவர் அளவுக்கு ராஜதந்திரம் இல்லாதவன் வைகோ என திமுக தலைவர் கருணாநிதி நினைக்கிறார். எங்கள் கட்சியை அழிக்க கருணாநிதி நினைக்கிறார்.நான் அழிக்க விடமாட்டேன் என்றுதான் சொன்னேன்.
ஆனால், அந்த வார்த்தைகளை எனது ராஜதந்திரத்தால் தான் திமுக ஆட்சிக்கு வரவில்லை என்று நான் கூறியதாக செய்தி வெளியானது. அந்த செய்தியில் உண்மையில்லை. நான் சொன்ன கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டன'' என்று வைகோ கூறினார்.