தமிழகம்

கூட்டு குடும்ப முறை அரிதாகி வருகிறது: முதியோர் தின விழாவில் ஆளுநர் ரோசய்யா கவலை

செய்திப்பிரிவு

கூட்டு குடும்ப முறை அரிதாகி வருவதால் முதியவர்கள் தனிமையில் வாடுகின்றனர் என்று தமிழக ஆளுநர் கே. ரோசய்யா கவலை தெரிவித்துள்ளார்.

உலக முதியோர் தினத்தையொட்டி சனிக்கிழமை சென்னை எத்திராஜ் கல்லூரியில் மூத்த குடிமக்களுக்கான நல அமைப்பு சார்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, நலஅமைப்பின் தலைவர் எம். சிங்கராஜா, செயலர் எஸ்.ஜெயகுமார், கல்லூரி தலைவர் வி.எம். முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலக முதியோர் தினத்தையொட்டி ஆசியாவில் முதன் முறையாக நரம்பியல் துறையில் அறுவைச் சிகிச்சை பட்டம் பெற்ற முதல் பெண்மணி டி. எஸ். கனகா, ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அம்புரூஸ், தனியார் போக்குவரத்து துறை சேர்ந்த சி. என். பிரசாத் ஆகியோருக்கு நல அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை ஆளுநர் கே. ரோசய்யா வழங்கினார்.

இதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ரோசய்யா பேசியதாவது:

இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். வேலைச் சூழ்நிலை காரணமாக ஓடிக்கொண்டு இருக்கும் பலர் தங்களின் பெற்றோர்களிடம் அமர்ந்து பேசுவதற்கு நேரம் செலவழிக்காமல் உள்ளனர். கூட்டு குடும்ப முறையை பாரம்பரியமாக கொண்டது நம்முடைய நாடு. ஆனால் தற்போது அம்மாதிரியான குடும்ப முறைகள் அரிதாகி வருகிறது. இதனால் குடும்பத்தின் வயதான பெற்றோர்கள் பலர் தங்களின் பிள்ளைகளால் தனிமை மற்றும் கவனிக்கப்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஐ.நா சபையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2050ம் ஆண்டில் நம் நாட்டில் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் வரை உயரும் என்றும், 80 வயது உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் முதியவர்கள் மீதான நம்முடைய அன்பும், அக்கறையும் கூடுதலாக தேவைப்படுகிறது. தங்களின் பெற்றோர்களை கவனிக்க வேண்டியது ஒவ்வொரு இளைஞரின் கடமையாகும். இதனை கடமை என்று மட்டும் எண்ணாமல் பெற்றோர்களுக்கு முதுமை காலத்தில் உறுதுணையாக இருப்பது பெருமை என கருத வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT