மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உயர்கல்வி என்பது இன்றைக்கு ஒவ்வொரு மாணவரின் உயிர் மூச்சாக இருக்கிறது. ஆனால் அதற்குரிய வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் வங்கியிலிருந்து கல்விக் கடன் பெற்று மேல் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.
2013 –ம் ஆண்டில், தமிழகத்தை சேர்ந்த 8 லட்சத்து 86 ஆயிரத்து 752 மாணவர்களின் கல்விக்கடன் ரூ.13,343.65 கோடி நிலுவையில் இருந்தது. ஆனால் 2015-ம் ஆண்டில் அந்த கல்விக் கடன் நிலுவைத் தொகை 16,313.06 கோடி ரூபாயாகவும், மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 60 ஆயிரத்து 202 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரப்படி, மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் 2013 -லிருந்து 2015-ம் ஆண்டு 22.3 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 8 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
அதேபோல் 2013-ம் ஆண்டு மாணவர்கள் பெற்ற சராசரி கல்விக்கடன் 2013-ல் 1 லட்சத்து 50 ஆயிரத்து 478 ரூபாயாக இருந்தது. அது 2015-ல் 1 லட்சத்து 69 ஆயிரத்து 892 ரூபாயாக மட்டுமே உயர்ந்துள்ளது. இது சதவீத அடிப்படையில் வெறும் 13 சதவீதம் தான் உயர்வு பெற்றுள்ளது. இவை அனைத்தும், கல்விக்கடன் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்கவார் அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
எதிர்காலக் கனவுகளுடன் கல்லூரி படிப்பை நிறைவு செய்துவிட்டு வெளியேறும் மாணவர்கள் ஒருபுறம் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் படிப்பிற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோருக்கும் கல்விக்கடன் தாங்க முடியாத சுமையாக மாறி வருகிறது.
இன்னும் சொல்வதென்றால் 2013 முதல் 2015ஆம் ஆண்டு வரை அகில இந்திய அளவில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் மட்டும் 45 சதவீதமாக இருக்கிறது என்று ஒரு நாளிதழ் கட்டுரை குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் தமிழக மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இருக்கும் கல்விக் கடன் சுமையை உணர முடிகிறது.
வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலையில் கல்விக்கடன் பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் வங்கி அதிகாரிகள் கெடுபிடி செய்வதும், துன்புறுத்துவதும் தொடர்கதையாக இருக்கிறது. கல்விக்கடனைச் செலுத்தாத மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லெனின் என்ற பொறியியல் மாணவரின் கல்வி சான்றிதழ்களை வங்கி அதிகாரிகள் பறித்துச் சென்ற கொடுமையும், அந்த அவமானத்தை தாங்க முடியாத மாணவன் லெனின் தற்கொலை செய்து கொண்டதும் கல்விக்கடனால் மாணவர்களும், பெற்றோரும் எத்தகைய துயரங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
தனியார் வசூல் ஏஜெண்டுகளை வைத்து வங்கிக் கடன் வாங்கிய மாணவர்களை துன்புறுத்தும் செயல்களிலும் கடன் கொடுத்த வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ''வங்கிகளில் கல்விக்கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக்கடனை அரசே திருப்பிச் செலுத்தும்'' என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் போட்ட முதல் கையெழுத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடனை முதல்வர் ஜெயலலிதா அறவே மறந்து விட்டார். அந்த முதல் கையெழுத்தில் கல்விக்கடன் தள்ளுபடி அறிவித்திருந்தால் மதுரை லெனின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
இன்றைக்கு தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கி 84 லட்சம் பேர் வேலையில்லாமல் காத்திருக்கும் நிலையை அறவே நீக்கிட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அதிமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் வேலை வாய்ப்பு இல்லாத மாணவர்களின் கல்விக் கடனை அரசே திருப்பிச் செலுத்துவதுடன், கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அதிமுக அரசு முன் வர வேண்டும்.
நூறு நாள் ஆட்சியின் சாதனை என்று விளம்பரம் கொடுத்து ஆடம்பரமாக கொண்டாடும் அதிமுக அரசு, கல்விக்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்களை நம்பித் தான் இந்த மாநிலம் மட்டுமல்ல, இந்த நாடும் இருக்கிறது என்பதை உணர்ந்து, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் கருதி, மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்'' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.