தமிழகம்

அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சுக்கு எதிர்ப்பு: பேரவையில் அமைச்சர்களுடன் திமுக கடும் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் - திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக நடைபெற்ற விவாதம்:

பூங்கோதை ஆலடி அருணா (திமுக):

ஆலங்குளம் தொகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் அமைக்க அரசு முன்வருமா?

சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்:

அதிமுக ஆட்சியில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 191 புதிய மன்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆலங்குளத்தில் ஏற்கெனவே குற்றவியல் நீதிமன்றம் தொடங் கப்பட்டுள்ளது. தனது தொகுதியில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் உறுப்பினர் கேள்வி கேட்டுள்ளார்.

பூங்கோதை:

ஆலங்குளத்தில் குற்றவியல் நீதிமன்றம் அறிவிக் கப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு அதிமுக பிரமுகரின் சோப்புக் கம்பெனியில் தொடங்கப்பட்டுள் ளது. அங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:

கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டு கூடாது என்பது மரபு. ஆனால், எதுவும் தெரியாமல் பேசுகிறார் என திமுக உறுப்பினர் பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் நேரடியாக குற்றம்சாட்டுகிறார். இது நியாயம்தானா?

பேரவைத் தலைவர் பி.தனபால்:

கேள்வி நேரத்தின்போது குற்றம்சாட்டும் வகையில் யாரும் பேச வேண்டாம்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:

ஆலங்குளம் தொகுதியில் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது என்பதுகூட தெரியாமல் கேள்வி கேட்கிறார் என நடந்ததைத்தான் கூறினேன். இதில் குற்றச்சாட்டு எங்கிருந்து வந்தது?

(அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர்)

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:

எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது ஆளுங்கட்சி தரப்பில் அனைவரும் அமைதியாக கேட்கிறோம். ஆனால், அமைச்சர்கள் விளக்கம் அளிக்கும்போது திமுகவினர் கூச்சல் போடுகின்றனர். இது சரியல்ல.

மு.க.ஸ்டாலின்:

எதிர்க்கட்சித் தலைவர் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு பேசுகிறார். அதனால்தான் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.

அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி:

இப்போது நான் பேசிக் கொண்டு இருக்கும்போதே பேச முடியாதபடி கோஷமிடுகின்றனர். வேண்டும் என்றே உணர்ச்சி வயப்பட்டு பேசுவது தவறு. இரு தரப்பினரிடமும் பேரவைத் தலைவர் சரியாக நடந்துகொள்ள வேண்டும்.

பேரவைத் தலைவர்:

இரு தரப்பினரும் என்னைப் பார்த்து பேசினால் எந்தப் பிரச்சினையும் வராது. நீங்களே நேரடியாக பேசிக் கொள்வதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது.

பூங்கோதை:

ஆலங்குளத்தில் நீதிமன்ற தொடக்க விழாவுக்கு தொகுதி எம்எல்ஏவான எனக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை.

அமைச்சர் சி.வி.சண்முகம்:

நீதிமன்ற திறப்பு விழா அரசு நடத்தும் நிகழ்ச்சி அல்ல. நீதிமன்றம் நடத்துகிறது. சட்டப்பேரவை உறுப்பினருக்கு அழைப்பிதழ் அனுப்பாதது தவறுதான். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கும் சட்டம் நிறைவேற்றம்

சட்டப்பேரவையில் நேற்று, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கும் வகையில், தமிழ்நாடு மருத்துவ அறிவியல், பல் மருத்துவ இளநிலை படிப்பு கள், முதுநிலை படிப்புகளுக்கான சட்ட மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இது தொடர்பாக, திமுக உறுப்பினர் க.பொன்முடி பேசுகையில், ‘‘இந்த சட்ட முன்வடிவை திமுக வரவேற்கிறது. இதை நிறைவேற்றும் நேரத்தில், இதை மத்திய-மாநில அரசுகளின் கன்கரன்ட் பட்டியலில் வைக்காமல், மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் அழுத்தம் தரவேண்டும். மேலும், ஆளுநர் மூலம், இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய, காங்கிரசின் விஜயதரணி, ‘‘சட்ட முன்வடிவை காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். இன்று ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற்று விட்டாலும், எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் தடுக்க பள்ளிகளில் கல்வித் திட்டத்தை வலுவானதாக மாற்ற வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் விஜய பாஸ்கர் சட்டம் கொண்டுவரப் பட்டதன் அவசியத்தை தெரிவித் தார். அதன்பின் உரையாற்றிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,‘‘ சமூக நீதியை பாதுகாப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. மாநில அரசு பட்டியலில் தேர்வை கொண்டுவருவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சட்டப்பூர்வ நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம், ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்டங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தாக, பேரவைத்தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

SCROLL FOR NEXT