திருச்சியில் பிப். 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ள திமுக-வின் 10-வது மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றன.
6 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட மாநாட்டு பந்தலில் நாற்காலிகள் போட்டால் நிறைய பேர் உட்கார முடியாது என்பதால், முக்கிய பிரமுகர்கள் உட்கார மட்டும் சில ஆயிரம் நாற்காலிகளைப் போட்டுவிட்டு, மீதி இடங்களில் பிளாஸ்டிக் தரைவிரிப்பு அமைக்க உள்ளனராம்.
20 இடங்களில் குடிநீர்க் குழாய்கள் மூலம் ஆர்.ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கவுள்ளனர். இதற்காக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
550 கழிப்பறைகளும், 150 குளியலறைகளும் மாநாட்டுப் பந்தலின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன.
தலைவர்கள் தங்குவதற்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஹைடெக் இல்லங்கள், இணைய மற்றும் தொலைநகல் வசதி கொண்ட மீடியா மையம் போன்றவை மாநாட்டு மேடை அருகிலேயே தயாராகின்றன.
பந்தலின் இருபுறமும் குறைந்த கட்டண உணவு விடுதிகள், மருத்துவ உதவி மையம் போன்றவையும் ஆயத்த நிலையில் உள்ளன. மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே 50 எல்இடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். தொண்டர்கள் தங்குவதற்காக 50-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.
தற்போது நிகழவிருக்கும் மாநாட்டையும் சேர்த்து திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட 5 மாநாடுகளில் 4 மாநாடுகளில் நேரு முக்கியப் பங்காற்றியிருக்கிறார். அதில் மூன்றுக்கு இவர்தான் வரவேற்புக்குழுத் தலைவர். ‘திமுகவில் யாருக்கும் கிடைக்காத பெருமை இது’ எனக் கருதி நேரு மாநாட்டு ஏற்பாடுகளில் சுறுசுறுப்புக் காட்டி வருகிறாராம்.