தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சிக்கு மீள முடியாத படுதோல்வி கிடைத்துள்ளது என்றும், தேர்தலில் மோடி அலை வீசுகிறது என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு, இதுவரை வரலாறு காணாத படுதோல்வி கிடைத்து உள்ளது.
தமிழக வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும், ஈழத்தமிழர் படுகொலையில் பங்காளியாகச் செயல்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக்களுக்கு, காங்கிரசின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது.
2014 இல் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதற்கு இத்தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுகின்றன.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஓராண்டு காலத்தில் மக்களின் மதிப்பையும், ஆதரவையும் பெற்று, மதிக்கத்தக்க இடங்களைப் பெற்று உள்ளது, பாராட்டுக்கு உரியதாகும்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்யம்தான் மக்களின் தீர்ப்பாக இருக்கும்.
ஏற்காடு இடைத்தேர்தலில், வினியோகம் செய்யப்பட்ட ஊழல் பணத்தின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில், இரண்டு கட்சிகளுக்கும் வாக்குகள் கிடைத்து உள்ளன" என்று வைகோ கூறியுள்ளார்.