தேர்தல் நேரத்தில் வாக்காளர் களைக் கவருவதற்காக சில கட்சிகள் ரொக்கப் பணத்தையும் பொருள்களையும் கொடுப்பது உண்டு. இதுபற்றி எல்லா கட்சிகளும் பரஸ்பரம் புகார் சொல்வது வழக்கம். இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி, வாக்காளர்களுக்கு எந்த வழியிலாவது பணமோ, பொருளோ வழங்கப்பட்டுவிடுகிறது.
மதுரை திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில்தான் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதன்பிறகு எல்லா பொது மற்றும் இடைத்தேர்தல்களிலும் இதுபோன்ற புகார்கள் அதிகரித்துவிட்டது.
ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் வரும் 4-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும்கட்சியான அதிமுக மீது 5-க்கும் மேற்பட்ட புகார்களை திமுக அளித்துள்ளது. இதுபோல், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த இடைத்தேர்தல்களிலும் அதிமுக வினர் சரமாரியாக விதிமீறல் புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்காடு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக சேலம் மாவட்ட எல்லைக்குள் நடத்தப்பட்ட வாகன சோதனைகளின்போது ரூ.1.41 கோடி ரொக்கப் பணமும், 10 கிலோ தங்க நகைகளும் பறி முதல் செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் தேர்தல் காலங்களில் ரூ.41 கோடி ரொக்கப்பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது.
இது குறித்து 'தி இந்து' நிருபரிடம் தேர்தல் துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்ததாவது: கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின்போது மட்டும் தமிழ கத்தில் ரூ.36 கோடி அளவுக்கு ரொக்கப் பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன (திருச்சியில் ஒரு பஸ்சில் இருந்து ரூ.5 கோடியைப் பறிமுதல் செய்தார் ஆர்.டி.ஓ. சங்கீதா).
இதுமட்டுமின்றி, திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை மற்றும் ஏற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களையும் சேர்த்து இதுவரை ரூ.41 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2011 தேர்தலில் மட்டும், பணம் பட்டுவாடா செய்ததாக அரசியல் கட்சிகள் மீது 784 வழக்குகள் போடப்பட்டன. இதில், 106 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 556 வழக்குகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பணம் எங்கே போகிறது?
பணப் பட்டுவாடா புகார்களில், அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை நிரூபிப்பது மிகவும் சிக்கலான விஷயம். தேர்தல் நேர சோதனையில் சிக்கும் பணத்தை வருமானவரித் துறையினரிடம் சேர்த்துவிடுவோம். அவர்கள், அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவற்றுக்கு முறையான ஆவணம் வைத்திருக்கிறார்களா? வரியை தவறாமல் செலுத்தி வருகிறார்களா? என்பதை விசாரிப்பார்கள். முறையான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தால் மட்டுமே பணம் மற்றும் பொருட்கள் திருப்பி அளிக்கப்படும். இவ்வாறு தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.