தமிழகம்

இலங்கை தூதருக்கு சம்மன்: பிரமருக்கு ஜெயலலிதா கடிதம்

செய்திப்பிரிவு

கடந்த ஒரு வாரத்தில் இலங்கை கடற்படையினரால் 87 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்ப வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்: "தமிழக மீனவர்கள் 57 பேரை இரு வேறு சம்பவங்களில் அவர்களது 11 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. இது குறித்து தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். மேலும், தாங்கள் தனிப்பட்ட முறையில் இதில் தலையிட்டு கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

கடிதம் எழுதிய மை காய்வதற்குள் இது போன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு மீன்பிடி பகுதியில் உள்ள ராமேசுவரம் மற்றும் மண்டபம், நாகபட்டினம் மாவட்டம் ஆர்கோட்டுதுறை மீன்பிடி பகுதியை சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி 8 படகுகளுடன் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் 4-ஆம் தேதி அதிகாலையில் நடந்துள்ளது. அவர்கள் அனைவரும் வருகிற 13–ந் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அப்பாவி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுதில் இருந்தும், தாக்கப்படுவதில் இருந்தும் காக்கும் எண்ணத்தில் அரசு தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தது.

ஆனால் தமிழக மீனவர்களின் உரிமையை காப்பதில் மத்திய அரசு கடுமையாக தோல்வி அடைந்து விட்டதாலேயே இலங்கை கட்ற்படையினர் தைரியமாக தமிழக மீனவர்களை தாக்குகின்றனர் என்பதை பல முறை தெரிவித்திருக்கிறேன்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது இருநாட்டு மீனவர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தி உருவாக்கப்பட்ட நல்லெண்ணத்துக்கு எதிராக உள்ளது.

மீனவர்களிடையே இது போன்ற பதட்டம் தொடர வேண்டும் என்பது இலங்கை அரசு மற்றும் இலங்கை கடற்படையின் உண்மையான நோக்கமாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மீனவர்களிடையே இது போன்ற பதட்டம் தொடர வேண்டும் என்பது இலங்கை அரசு மற்றும் இலங்கை கடற்படையின் உண்மையான நோக்கமாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினையில் மத்திய அரசு, வெளியுறவு அமைச்சகம் மூலம் டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்ப வேண்டும். இதன் மூலம் நமது கடுமையான எதிர்ப்பை இலங்கைக்கு தெரிவிக்க வேண்டும்.

இப்பிரச்சினையை காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசின் உயர் மட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இருநாட்டு மீனவர்கள் தரப்பிலான பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தடம்புரளும் சூழ்நிலை ஏற்படும். அதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்று விடும்.

எனவே, கடந்த வாரம் இலங்கை கடற்படையில் கைது செய்யப்பட்ட 87 மீனவர்களையும், அவர்களது 19 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT