பல்லாவரம் நகராட்சிக்குட்பட்டது பால்கேணி விநாயகர் குளம். இது 100 ஆண்டுகள் பழமையானது. ஒரு காலத்தில் இந்த குளத்து நீரையே பல்லாவரம் மக்கள் குடிக்க பயன்படுத்தியுள்ளனர். இந்த குளத்து நீரை குடித்தால் நாள்பட்ட நோய்கள் குணமாகும் என்றும், இறந்தவர்களின் அஸ்தியை இந்த குளத்தில் கரைத்தால் ஆன்மா சாந்தி அடையும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த குளம் மொத்தம் 13 ஏக்கர் பரப்பரளவு கொண்டது. குளத்தை சுற்றியுள்ள 1 ஏக்கர் நிலம் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இவர்களால் இந்த குளம் மாசு அடைந்து வருகிறது. வீடுகளில் சேரும் குப்பை, கழிவுகளையும் ஆடு, மாடுகளின் கழிவுகளையும் குளத்தில் விடுகின்றனர். குளத்தை சுற்றி மலம், சிறுநீர் கழிக்கப்படுகிறது. கட்டிட கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் குளம் மாசு அடைந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர்.
இந்நிலையில், ‘பசுமை பெருக சுத்தம் செய்’ டிரஸ்ட் அமைப்பு பல்லாவரம் நகராட்சியுடன் இணைந்து இந்த குளத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி குளத்தில் மண்டிக் கிடந்த புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டு, அந்த மணலை வைத்து கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேட்டை தவிர்க்கும் வகையில் குளத்தின் கழிவுகள் முழுவதுமாக அகற்றப்பட்டு குளம் சுத்தம் செய்யப்பட்டது.