இதய குழாய் அடைப்பை நீக்க பயன்படும் ஸ்டென்டை அதிக விலைக்கு விற்பது குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதய குழாய் அடைப்பு நீக்கி (Cardiac Stents) இறக்குமதியாளர்கள், விநியோ கஸ்தர்கள், மருத்துவமனை பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடுஅரசு மருந்து கட்டுப் பாடுத் துறை அதிகாரிகள் கலந்துரை யாடல் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
இதய குழாய் அடைப்பு நீக்கி அதன் நிர்ணயிக்கப்பட்ட விலைக்குள் மக்களுக்கு தங்குதடையின்றி கிடைப்பது தொடர்பாக தமிழ்நாடுஅரசு மருந்து கட்டுப்பாடுத் துறை கண்காணித்து வருகிறது. விலையை அனைவரும் பின்பற்றி, தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தில் எவ்வித புகாரும் பெறப்படவில்லை. ஆனாலும் இருதய குழாய் அடைப்பு நீக்கி தட்டுப்பாடு மற்றும் அதிக விலை குறித்து பொதுமக்கள் www.nppaindia.nic.in என்ற வலைதளத்தில் Pharma Jan Samadhan என்ற குறை தீர்ப்பு அமைப்பில் புகார் தெரிவிக்கலாம். கட்டணமில்லா தொலைபேசி எண் 1800111255, வாட்ஸ்அப் எண் 9958217773, தொலைபேசி எண் 044-24321830 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம் என்றார்.