நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை அமலாக்க கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது :-
நீதிபதிகள் நியமனத்தில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை அறுபது. தற்போது ஓய்வு பெற்ற நீதிபதிகள் நீங்கலாகக் காலியாக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 14 .
இதில், கொலிஜியம் முறையில் இரண்டு நீதிபதிகள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 நீதிபதிகள் காலி இடங்களுக்குத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மீனவர்கள் மற்றும் சலவைத் தொழில் செய்யும் சமுதாயங்களை சேர்ந்த தகுதி வாய்ந்தவர்களை நீதிபதி பதவிகளுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் தலைமை நீதிபதியும் இணைந்த மூன்று நீதிபதிகள் கொலிஜியம் என்ற முறையில் தங்களுக்குத் தாங்களே நீதிபதிகளைத் தேர்வு செய்கிறார்கள். இந்த முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.