தமிழகம்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது: ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம்

செய்திப்பிரிவு

பாலாற்றில் தடுப்பணையின் உயரத்தை ஏற்கெனவே இருந்த அளவுக்கே குறைத்து, தமிழகத் துக்கு இயற்கையாக கிடைக்கும் நீரை உறுதிப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மெட்ராஸ் மைசூர் ஒப்பந்தத்தை மீறி, ஆந்திர அரசு தன்னிச்சையாக தடுப் பணையின் உயரத்தை உயர்த்து வதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆந்திர - தமிழக எல்லை அருகே, சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் கிராமப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்த ஆந்திர நீர்ப் பாசனத் துறை நடவடிக்கை எடுத் திருக்கிறது. இந்த விவகாரத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

பாலாறு என்பது மாநிலங் களுக்கு இடையில் ஓடும் ஆறு. ஆந்திர அதிகாரிகளின் தன்னிச் சையான இந்த நடவடிக்கை தமிழ கத்தில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

பாலாற்றில் ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறை என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். தமிழகத்தில் இந்த பாலாற்றின் மூலம் 4.20 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தமிழகத்தின் வட மாவட்ட விவசாயிகள் இந்த ஆற்றைத்தான் நம்பியுள்ளனர். மணற்பாங்கான இந்த பாலாறுதான் வட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையத் துக்கும் பாலாற்று நீர் விநியோகிக் கப்பட்டு வருகிறது.

மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகளில் ஒன்று பாலாறு என்பது கடந்த 1892-ம் ஆண்டு மெட்ராஸ் - மைசூர் ஒப்பந்தத்தில், ‘ஏ’ பிரிவின் இணைப்பில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலங் களுக்கு இடையில் 15 ஆறுகள் ஓடுவதாக ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆறுகளில், கீழ் நிலையில் உள்ள மாநிலத்தைக் கேட்காமல், மேல் நிலையில் உள்ள மாநிலம் அணை, தடுப்பு, ஆற்றின் திசையை திருப்புதல், தண்ணீர் தேக்குதல் போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள் ளக் கூடாது எனவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சம்பந்தமாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ‘1892-ம் ஆண்டு மெட்ராஸ் - மைசூர் ஒப்பந்தத்தை மீறும் வகையில், பாலாற்றில் எந்த ஒரு கட்டுமானம் அல்லது பணி களும் மேற்கொள்ளக் கூடாது. பாலாற்றின் வேறு பகுதிகள் மற்றும் கிளை நதி பாயும் பகுதி களை ஆக்கிரமிப்பதோ, நீரை திருப்புவதோ கூடாது என ஆந்திர அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறி, சித்தூர் மாவட்டம் குப்பம் வருவாய் மண்டலத்தில் உள்ள பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தை ஆந்திர அரசு தற்போது தன்னிச்சையாக அதிகரிப்பதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.

தாங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தடுப் பணையின் உயரத்தை ஏற்கெ னவே இருந்த அளவுக்கே குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். கூடுதல் தண்ணீரை தேக்காமல், தமிழகத் துக்கு இயற்கையாக கிடைக்கும் நீரை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தங்களது உடனடி சாதகமான நடவடிக் கையை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT