கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் என்.கார்த்திக் (சிங்காநல்லூர்) எழுப்பி கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
''கோவை காந்திபுரம் 2-வது வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் உள்ளது. இங்கு ஆனந்தன் என்பவர் முழுநேர ஊழியராகவும், ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 17-ம் தேதி காலை 7 மணிக்கு அவர் கட்சி அலுவலகம் வந்தபோது தீப்பற்றி எரிந்தது போன்ற வாசனையை உணர்ந்துள்ளார்.
உடனே அலுவலக வளாகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் வலது பக்க கதவுகளிலும், அலுவலக ஜன்னல் ஒன்றிலும் கரும்புகை படிந்திருந்ததை கண்டுள்ளார். கீழே மண்ணெண்ணெய் வாசனையுடன் கூடிய கண்ணாடி பாட்டிலும், கருகிய நிலையில் பெட்ரோல் வாசனையுடன் பிளாஸ்டிக் பாட்டிலும் கிடந்ததை பார்த்துள்ளார்.இது தொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 435 பிரிவு 3 இந்திய வெடிபொருள்கள் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றனர். தடய அறிவியல் நிபுணர் குழு, துப்பறியும் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்கச் செய்யும் குழு ஆகியவை வரவழைக்கப்பட்டு தடயங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு எதிரிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய பல்வேறு கோணங்களில் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்'' என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.