தமிழகம்

கருணாநிதிக்கு தலைவர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

இன்று 94-வது பிறந்த நாள் காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவும், சட்டப்பேரவை வைர விழாவும் கொண்டாடப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன். தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிக நீண்ட அரசியல் பயணம் அவருடையதுதான். தமிழகத்தில் 4 தலைமுறை தலைவர்களுடன் அரசியல் செய்து வரும் பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.

கருணாநிதிக்கும் எனக்கும் அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தின் நலனுக்காக பலமுறை அவரை உரிமையுடன் விமர்சித்துள்ளேன். அந்த விமர்சனங்களை அவர் ரசித்திருக்கிறாரே தவிர, ஒருபோதும் வெறுத்தது கிடையாது. அதே நேரத்தில் தமிழகத்துக்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டதில் பெரியார், அண்ணா ஆகியோரின் வழியில் கருணாநிதி செய்த பங்களிப்பை ஒருபோதும் நான் மறுத்ததில்லை. அதை எவரும் மறுக்கவும் முடியாது.

பொதுவாழ்வில் 80 ஆண்டுகளைக் கடப்பதும், சட்டப்பேரவை உறுப்பினராக வைர விழா காண்பதும் பெரும் பேறு. அப்பேறு நண்பர் கருணாநிதிக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொதுவாழ்வில் நூற்றாண்டை கடந்து அவர் சேவையாற்ற வேண்டும்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

94-வது பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை வாழ்த்தி வணங்குகிறேன். இளம் வயதிலேயே பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த அவர், 1957 முதல் களம் கண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வென்று தனக்கு நிகர் யாரும் இல்லை என்கிற அளவுக்கு சாதனை படைத்தவர். சட்டப்பேரவை வைர விழா காணும் அவரை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், எழுத்துலகின் மூத்த படைப்பாளி, போட்டியிட்ட தேர்தல்கள் அனைத்திலும் தோல்வியே காணாத சாதனையாளர் கருணாநிதிக்கு எனது பிறந்த நாள் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழக அரசியல் வரலாற்றில் அவரது பெயர் ஒலிக்காத பகுதி இருக்க முடியாது. கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ பாஜக சார்பில் வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

தமிழக முதல்வராக பல ஆண்டுகள் பணியாற்றிய கருணாநிதி, தேசிய தலைவர்களாலும் மதிக்கப்படுபவர். இலக்கியம், கலை, சமுதாயம், அரசியல் ஆகிய நான்கு தளங்களிலும் முத்திரைப் பதித்தவர் கருணாநிதி மட்டுமே.

தன்னம்பிக்கை, தளராத உழைப்பு, தோல்வி கண்டு துவளாமை, என்றும் துளிர்க்கும் போராட்ட உணர்வு ஆகியவையே அவரது வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமைந்தன. சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள் என்பது எவரும் எட்ட முடியாத சிகரம். சாதாரண மனிதராக வாழ்வைத் தொடங்கி, சாதனை நாயகராக உயர்ந்து நிற்கும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் சீரிய பணிகள் தொடர வேண்டும். வைர விழா நாயகரே, வாழ்க நூறாண்டு என வாழ்த்துகிறேன்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

தனது 14-வது வயதில் ‘ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த நாடிதல்லவே’ என்ற பாவலர் பாலசுந்தரத்தின் கொள்கை முழக்கத்தை முரசொலித்தவர் கருணாநிதி. மாணவப் பருவம் தொட்டு, முதுமையிலும் கடும் உழைப்புக்கு பெயர் பெற்றவர். எங்களது 70 ஆண்டுகால கொள்கை நட்பு இன்றும் தொடர்கிறது. ஈரோட்டு குருகுலத்தின் இணையற்ற தயாரிப்பு. காஞ்சி அரசியல் பாசறையின் கச்சிதமான தனி வார்ப்பு அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்

தமிழக அரசியலில் எவராலும் வெல்ல முடியாத தலைவர் கருணாநிதி. அவருக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்ததும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. விசிகவின் கோரிக்கையை ஏற்று தலித்களின் பஞ்சமி நிலங்களை மீட்க ஓய்வுபெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் ஆணையம் அமைத்தார். தலித்களின் மண்ணுரிமை கோரிக்கைக்கு அவர் அளித்த மதிப்பு மறக்க முடியாதது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தின் மூத்த தலைவராகவும், அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தலைவராகவும் திகழ்பவர் கருணாநிதி. தமிழகத்தின் பின்தங்கிய கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கடின உழைப்பால் தேசிய அளவில் தலைவராக உயர்ந்தார். இத்தகைய தலைவருக்கு 94-வது பிறந்த நாள், சட்டப்பேரவை பணிக்கு வைர விழாவும் நடைபெறுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நல்ல உடல்நலம் பெற வாழ்த்துகிறேன்.

கேரள ஆளுநர், முதல்வர் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதிக்கு கேரள ஆளுநர் பி.சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதிக்கு நேற்று அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கேரள ஆளுநர் பி.சதாசிவம்:

கருணாநிதி தனது ஆட்சியில் விவசாயிகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஏழைகளுக்காகவும் பாடுபட்டவர். அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர். முதல்வராக அவர் கொண்டு வந்த கொள்கைகள், மக்கள் நலத் திட்டங்கள் மக்கள் மீது அவர் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்துகின்றன. 94-வது பிறந்த நாள் காணும் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்:

94-வது பிறந்த நாள் காணும் தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுநலனில் அக்கறை கொண்டுள்ள தங்களது பொதுவாழ்வு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்களுக்காக பணியாற்ற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT