இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் இறந்து விட்டதால் இந்த வழக்கை முடித்து வைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2016 ஜூன் 24-ம் தேதி மென்பொறி யாளர் சுவாதி(21) நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி யான ராம்குமார் என்பவரை போலீஸார் கடந்த ஜூலை 1-ம் தேதி கைது செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட ராம்குமார், அதன்பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட் டார். கடந்த செப்.18-ம் தேதி மின் கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட தாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவரின் முன்னிலையில் அக்.1-ம் தேதி ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அந்த அறிக்கையை போலீஸார் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத் தில் தாக்கல் செய்தனர். பிரேதப் பரிசோதனை வீடியோ, அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களை தங்களுக்கும் வழங்கக்கோரி ராம்குமார் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சுவாதி கொலை வழக்கு விசாரணை எழும்பூர் 14-வது குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.கோபிநாத் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சுவாதி கொலை யில் குற்றம் சாட்டப்பட்ட ராம்கு மாரும் இறந்து வி்ட்டதால் வழக்கை முடித்து வைக்கக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்ற குற்றவியல் நடுவர், சுவாதி கொலை வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
சுவாதி கொலை சம்பவத் துக்கு பிறகு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக் களை கட்டாயம் பொருத்த வேண்டுமென நீதிபதி என்.கிருபா கரன் விடுத்த வேண்டுகோளை ஏற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். அதன்படி அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.