தமிழகம்

போலி நிதி நிறுவனத்தின் ரூ.18 கோடி முடக்கம்: கவர்ச்சி திட்டம் மூலம் ஏமாற்றியதால் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிய போலி நிதி நிறுவனம் வங்கிக் கணக்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.18 கோடியை முடக்கிவைத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை ரயிலார் நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் செயல்பட்டுவந்த எம்ஆர்டிடி (மதுரை ரூரல் டெவலப்மென்ட் டிரான்ஸ்பர்மேஷன் இந்தியா லிட்.) நிறுவனம் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதிலும் பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வெற்றிவேல் என்பவர் மதுரை எஸ்.பி. விஜயேந்திர பிதாரியிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.

போலீஸார் விசாரித்தபோது பல்வேறு மோசடியான திட்டங்களை அறிவித்து பல கோடி ரூபாய் வசூலித்தது தெரிந்தது. இந்த நிதி நிறுவனம் அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி ஏதும் பெறவில்லை என்றும் தெரிந்தது. இதையடுத்து மதுரை எல்லீஸ்நகர், ரயிலார்நகர், கீழசந்தைப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த சுரேஷ்பாட்சா, லியோன், நிகார் யூசுப், மும்தாஜ்பேகம் பாபா உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மதுரை கூடல்நகரில் செயல்படும் நிதி நிறுவன இயக்குநர்கள், ஊழியர்களாக உள்ளனர்.

ஏமாற்றி பெற்ற பணத்தை பிற தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். நிதி நிறுவனத்தின் பெயரில் பல்வேறு வங்கிகளில் ரூ.18 கோடியை முதலீடு செய்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இந்தப் பணத்தை முடக்கி வைத்து மதுரை மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.அலெக்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டது. இதில் இயக்குநர் குமார் விசாரணைக்கு ஆஜரானார். மற்றவர்கள் கொடுத்திருந்த முகவரி போலியானது எனத் தெரிந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட் டுள்ளனர். போலீஸார் தேடிவரும் 12 பேரும் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT