கலவரம் நடப்பதாகவும் தங்களை போலீஸ் எனக் கூறியும் சென்னையில் அடுத்தடுத்து 4 மூதாட்டிகளிடம் 38 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மந்தைவெளியைச் சேர்ந்தவர் சுகந்தா. இவர் நேற்று காலை 9 மணியளவில் அதே பகுதி 4-வது டிரஸ்ட் குறுக்கு தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு போலீஸ்போல் தோற்றம் கொண்ட 3 பேர் வந்தனர்.
தங்களை காவல்துறையைச் சேர்ந்தவர் கள் என சுகந்தாவிடம் அறிமுகம் செய்து கொண்டனர். மந்தைவெளி பகுதியில் கலவரம் நடந்து வருகிறது. எனவே, நீங்கள் கழுத்தில் நகை அணிந்து சென்றால் அதை பறித்து விடுவார்கள். எனவே, செயினை பத்திரமாக கழற்றி வைத்துக்கொண்டு வீட்டில் போய் அணிந்துகொள்ளுங்கள் என்று அக்கறையுடன் பேச்சுக் கொடுத்தனர்.
இதை உண்மை என நம்பிய சுகந்தா கழுத்து, கையில் அணிந்திருந்த நகைகளை கழற்றி மடியில் வைக்க முயன்றார். இதைக் பார்த்துக்கொண்டு இருந்த 3 பேரில் ஒருவர், ‘மடியில் வைக்காதீர்கள். அது கீழே விழுந்து விடும். என்னிடம் கொடுங்கள். நான் பேப்பரில் மடித்து தருகிறேன்’ எனக் கூறி நகையை மடிப்பது போல் பாவனை செய்து அதற்குள் கல் வைத்து கொடுத்து விட்டார். சுகந்தா வீடு சென்று பார்த்தபோது நகைக்கு பதில் கல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் முகப்பேரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (65) என்பவரிடமும் கிண்டியில் அதே பாணியில் 3 பேர் பேச்சுக் கொடுத்து அவர் அணிந்திருந்த நகையை வாங்கி பேப்பரில் மடித்துக் கொடுப்பதுபோல் தங்க நகைக்கு பதில் கவரிங் நகையை வைத்து கொடுத்தனர். இதுகுறித்து கிண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
அபிராமபுரத்தில் கோமதி என்ற பெண் ணிடம் 10 பவுன் நகையும் அடையாரில் லட்சுமி என்ற பெண்ணிடம் 9 பவுன் நகையும் இதேபோல கொள்ளையடிக் கப்பட்டுள்ளது. 4 இடத்திலும் மொத்தம் 38 பவுன் நகை மோசடி செய்யப்பட்டுள்ளது.