வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக நெல்லுக்கு மாற்றாக குதிரைவாலி சாகுபடி தென் தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது.
சிறுதானிய வகையை சேர்ந்த குதிரைவாலியில் நார்ச்சத்து, இரும்புச் சத்து ஆகியவை அதிகம் இருப்பதால் நீரிழிவு நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றை குறைக்க உதவும் என கருதப் படுகிறது. சுண்ணாம்புச் சத்து, தாமிரம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய சத்துகளும் இதில் உள் ளன. மேலும் உடல் பருமனை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. தற்போது உடல்நலன் சார்ந்த விழிப்புணர்வு, தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக குதிரைவாலி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குதிரைவாலி பிற சிறுதானியங்களைவிட மிக விரைவாக வளர்ந்து விளைச்சல் தரக்கூடியது. மேலும் குறைந்த தண்ணீர், உப்புத்தன்மை கொண்ட நிலம், நீர்தேங்கிய நிலம் என பல பகுதிகளில் வளரக்கூடியது. தற்போது நிலவும் வறட்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குதிரைவாலி சாகுபடி அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மதுரை வேளாண் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் சி.வன்னியராஜன் கூறியதாவது:
வழக்கமாக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் மானாவாரி பயிராக குதிரைவாலி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. நெல் சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீரை விட குறைவான தண்ணீர் போதுமானது என்பதால், ஜூன் ஜூலை, செப்டம்பர் அக்டோபர், ஜனவரி பிப்ரவரி மாதங்களில் தற்போது சாகுபடி செய்யப்படுகிறது.
அளவில் சிறியதாக இருப்பதால் இதை சுத்தம் செய்வது சிரமமாக இருந்தது. நவீன இயந்திரங் கள் வந்துவிட்டதால் சுத்தம் செய்வது எளிதாகிவிட்டது. இதன் காரணமாகவும் தண்ணீர் பற்றாக்குறை யின் காரணமாகவும் குதிரைவாலி சாகுபடி தென்மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. நெல் சாகுபடி இல்லாத காலங்களிலும் இதை பயிரிடுகிறார்கள். ஆனால் வடமாவட்டங்களில் குதிரைவாலி சாகுபடி மிகவும் குறைவு. மேலும் வறட்சியால் டெல்டா பகுதிகளிலும் குதிரைவாலியை பயிர் செய்ய பலர் கேட்டுள்ளனர். அங்கும் அதன் சாகுபடி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தானியம் மற்றும் பிற வேளாண் பொருள்களின் அளவை அவ்வப்போது மத்திய, மாநில அரசுகள் கணக்கெடுக்கும். அவ்வாறு உற்பத்தி அளவை கணக் கிடும்போது குதிரைவாலி உற்பத்தியை தனியாக கணக்கெடுக்கும் வழக்கம் இல்லை. கேழ்வரகு, தினை, கம்பு போன்ற சிறுதானிய உற்பத்தியில் இது சேர்க்கப்பட்டு விடுகிறது. ஆனாலும் தோராய மதிப்பீட்டின்படி பார்த்தால் இன்றைய சூழலில் தென்மாவட்டங்களில் மட்டும் சுமார் 5000 ஹெக்டேர் பரப்பில் குதிரைவாலி பயிர் செய்யப்படுகிறது.
ஒரு ஹெக்டேருக்கு 600 முதல் 800 கிலோ மகசூல் கிடைத்து வருகிறது. இதற்கு முன்பு மிக குறைவான பரப்பிலேயே குதிரைவாலி சாகுபடி செய்யப் பட்டு வந்தது என்று வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
புதிய ரகம் தயார்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘கோ 2’ வகை குதிரைவாலி தற்போது பரவ லாக பயிரிடப் படுகிறது.
இந்த நிலை யில் ‘மதுரை 1’ (ஏசிஎம் 10145) வகையை மதுரை வேளாண் கல்லூரி கண்டுபிடித்துள்ளது. இந்த ‘மதுரை 1’ ரகம் அனைத்து பருவத்திலும் வளரக் கூடியது. பாசன வசதியுள்ள நிலத்தில் ஹெக் டேருக்கு 2,200 முதல் 2,500 கிலோ வரை விளைச்சல் தரும். மானாவாரி சாகுபடி முறையில் 1,500 முதல் 1,700 கிலோ விளைச்சல் தரும்.
‘கோ 2’ ரகத்தைவிட புதிய ரகம் 15 சதவீதம் அதிக மகசூல் தரும். 95 முதல் 100 நாட்களில் அறுவடை செய்யலாம். அதிக அரவைத் திறன் கொண்டது. தண்டு துளைப்பான், கதிர் புஞ்சை போன்றவற்றுக்கு எதிர்ப்புச் சக்தியை பெற்றுள்ளது. சமைக்கவும் சாப்பிடவும் உகந்தது.
இந்த ரகத்தை வெளியிட தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் விரைவில் ‘மதுரை 1’ ரகம் வெளியிடப்படும் என்று மதுரை வேளாண் கல்லூரி முதல்வர் எஸ்.சுரேஷ் தெரிவித்துள் ளார்.