நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை விழா மே 6 முதல் 31-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. மே 19-ம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்குகிறது.
கோடை விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தலைமையில் உதகையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, வருவாய் அலுவலர் தெ.பாஸ்கர பாண்டியன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் என்.மணி, சுற்றுலா அலுவலர் ராஜன் உட்பட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர். இதில், கோடை விழாவுக்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டன.
இது தொடர்பாக ஆட்சியர் கூறும்போது, “கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6-ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்குகிறது. மாவட்ட வனத்துறை சார்பில், 7 முதல் 31-ம் தேதி வரை உதகை சேரிங்கிராசில் உள்ள தோட்டக்கலைத் துறை வணிக வளாகத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
12, 13, 14 ஆகிய தேதிகளில் கூடலூரில் வாசனை திரவியப் பொருட்கள் கண்காட்சியும், 13, 14 ஆகிய தேதிகளில் உதகை அரசினர் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடத்தப்படுகிறது. 16-ம் தேதி உதகை ஏரியில் படகுப் போட்டி நடத்தப்படுகிறது.
கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்க் கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 19 முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 27, 28 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி நடைபெறுகிறது. கோடை விழாவையொட்டி, உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பரத நாட்டியம், கிராமியக் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தொட்டபெட்டா மலைச் சிகரம், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் ஆகியவற்றை கண்டுகளிக்க, ஏப்ரல் 14-ம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” என்றார்.