ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நேரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்னால் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழர்களின் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்கப் பண்பாட்டின் அடையாளமாகவே ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தில் பல ஆண்டுக்காலமாக நடைபெற்று, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்த விளையாட்டினைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் எந்தவிதமான தடையும் இருக்க முடியாது என்று நம்புவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஒரு முறைக்குப் பல முறை தெரிவித்தார்.
கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று உறுதிக் கொடுத்தவரும் இதே அமைச்சர் தான்.
மத்திய அமைச்சர் மட்டுமல்ல; தமிழகத்தில் முதல் அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூட "தமிழக அரசு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம். அதில் எள்ளளவும் பின் வாங்க மாட்டோம். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக் கட்டிக் காப்போம் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்ட நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று உறுதியளித்த தமிழகத்தை ஆளும் முதல் அமைச்சரும், மத்திய ஆட்சியில் தமிழகத்தின் சார்பில் பொறுப்பேற்றுள்ள அமைச்சரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? தமிழக மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர்கள் அளிக்கப் போகின்ற பதில் என்ன?
திமுகவைப் பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகளுக்கு போதிய கால அவகாசம் கொடுத்து கடந்த மாதமே ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தி அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டு எச்சரிக்கை செய்த பிறகும், மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரவில்லை.
முதல்வர் வழக்கம் போல மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினாரே தவிர, நேரில் சென்று வலியுறுத்தவில்லை. மத்திய அரசு இதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க எந்தவிதமான முயற்சியையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக இளைஞர்களுக்கு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று உறுதியளித்த மத்திய அமைச்சரும், தமிழக முதல்வரும் தான் பதில் அளிக்க வேண்டும்.
திமுகவைப் பொறுத்தவரையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பது தான் அன்று முதல் இன்று வரையில் உறுதியாகத் தெரிவித்து வரும் கருத்து. அந்தக் கருத்தில் இனியும் உறுதியாக இருப்போம்.
இந்தப் பிரச்சினையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நடவடிக்கையை உரிய நேரத்தில் எடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நாளைக் காலை (13-1-2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்னால் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.