சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக சிபிஐ விசா ரணை கோரிய வழக்கு விசார ணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜல்லிக்கட்டுக்காக போராடி யவர்கள் மீது தடியடி நடத்தியது குறித்தும், இதில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை திருவல்லிக் கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் குமார், தமிழ்மணி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது இது தொடர் பாக ஏற்கெனவே ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமை யில் தமிழக அரசே விசாரணை கமிஷன் அமைத்துள்ள நிலையில், மேற்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கத் தேவையில்லையே என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது அரசு தரப்பில் இது தொடர்பாக விரிவாக பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.