பழ.நெடுமாறன் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தையொட்டி கட்டப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தனி நபரின் சொந்த உபயோகத்துக்காகவோ, வணிக நோக்கத்துடனோ கட்டப்பட்டது அல்ல. இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களின் நினைவாக கட்டப்பட்டதாகும்.
இந்நிலையில் அங்கு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அவதிப்படும் இலங்கை தமிழர்களுக்காகவும், அவர்களுக்காக போராடும் மக்களுக்கு போராயுதமாகவும் தமிழக சட்ட மன்றத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூழ்நிலையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளது, “முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்தாக” அமைகிறது.
தமிழக அரசு முள்ளிவாய்க்காலில் பலியான மக்களின் அளப்பரிய தியாகத்தை மதிப்பதால் அதற்காக பாடுபட்டு நினைவாலயம் எழுப்பிய நெடுமாறன் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும் வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.