ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரந்தர உறுப்புக் கல்லூரியாக இணைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. 2014-15 கல்வியாண்டு முதல் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சி.பி.பழனிவேலு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
சென்னையில் இயங்கிவரும் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி கடந்த 2009-10ம் ஆண்டு முதல் நீட்டிக்கப்படாமல் இருந்தது. இதனால், புதிய மாணவர்களை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்க முடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில், ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரந்தர உறுப்புக் கல்லூரியாக இணைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கடந்த 25-ம் தேதியிட்ட ஆணை மூலம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்திய மருத்துவக் கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு 2014-15 கல்வியாண்டு முதல் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கும் கல்லூரி செயல்பாட்டுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அனைத்து பரிமாணங்களிலும் சிறந்து விளங்குவதால், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின்படி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவாளர் பழனிவேலு கூறியுள்ளார்.