நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த தே.மு.தி.க. உறுப்பினரான பொள்ளாச்சி ஜேக்கப் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங் களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 27.6.2013 அன்று நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக ஏ.ஆர்.இளங்கோவன் போட்டியிட்டார். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தேர்தல் நாளில் தே.மு.தி.க. வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கொறடா உத்தரவை மீறி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கொறடா உத்தரவை மீறியதை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் சஸ்பெண்ட் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு அருண் பாண்டியன், ஆர்.சாந்தி, கே.தமிழழகன், சி.மைக்கேல் ராயப்பன், கே.பாண்டியராஜன், ஆர்.சுந்தர்ராஜ் மற்றும் டி.சுரேஷ்குமார் ஆகிய 7 எம்.எல்.ஏ.க்களுக்கு தே.மு.தி.க. கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக மீண்டும், வரும் பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் அந்த 7 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களையும் வாக்களிக்க அனுமதித்தால், கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக மீண்டும் அவர்கள் வாக்களிக்கக் கூடும். ஆகவே, வரும் மாநிலங்களவைத் தேர்தலில் அந்த 7 எம்.எல்.ஏ.க்களையும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ஜேக்கப் கோரியுள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.