ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் முற்றுகைப் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நேமத்தான்பட்டியில், பீட்டா அமைப்பு ஆதரவு நடிகை திரிஷா நடிக்கும் படப்பிடிப்புக்கு தமிழ் அமைப்புகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகை திரிஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
காரைக்குடி அருகே நேமத்தான்பட்டியில், நடிகர் ஆர்யா, நடிகை திரிஷா நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த தமிழர் தேசிய முன்னணி மாநில பொதுச்செயலாளர் லெ.மாறன், காரைக்குடி மக்கள் மன்றத் தலைவர் ராஜ்குமார், செயலாளர் ஆறுமுகம், ஆம்ஆத்மி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், தமிழர் முன்னணி தேசியச் செயலாளர் இமயம் சரவணன், மற்றும் தமிழ் அமைப்புகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சென்று நடிகை திரிஷா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி படப்பிடிப்பு குழுவினரை முற்றுகையிட்டனர்.
காரைக்குடி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார், அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நடிகை திரிஷா நேற்று நடந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும், படப்பிடிப்பு நடத்துவதற்கு உரிய அனுமதி பெறவில்லை எனவும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.