என் மீது எத்தனை அவதூறு வழக்குகள் வந்தாலும் அவற்றை சட்டப்படி சந்திக்கத் தயாராக உள்ளேன் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் கடந்த ஜூன் 6-ம் தேதி தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாக அரசு வழக்கறிஞர் ஆரோக்கியசாமி கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி பாலசுந்தரகுமார், மு.க.ஸ்டாலின் நவ. 25-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து, ஸ்டாலினை வரவேற்று திமுக வழக்கறிஞர்கள் திண்டுக்கல் நீதிமன்றம் முன் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அதிமுகவினர் பேனரைக் கிழித்தெறிந்து, அதே இடத்தில் மு.க.ஸ்டாலினைக் கண்டித்து பேனர் வைத்தனர். இதனால் அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
விசாரணை தள்ளிவைப்பு
இந்நிலையில் திங்கள்கிழமை நீதிபதி பாலசுந்தரகுமார் முன் மு.க.ஸ்டாலின் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி 2014 ஜனவரி 6-ம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் பலமுறை ஜெயலலிதா ஆஜராகாமல் வாய்தா வாங்கிவருகிறார். என் மீது எத்தனை அவதூறு வழக்குகள் போட்டாலும் சரி, பொய் வழக்குகள் போட்டாலும் சரி, எதையும் சட்டப்படி சந்திக்கத் தயாராக உள்ளேன். அமெரிக்காவில் இருந்துவந்த பல கோடி ரூபாய் நிதியை முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்காமல் முதல்வர் ஜெயலலிதா அவரது சொந்தக் கணக்கில் வைத்துக்கொண்டதாக சி.பி.ஐ. போட்ட டாலர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்குடன் ஜெயலலிதா செயல்படுகிறார்.
2001-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ஒரே நேரத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வழக்கும் முடிவுக்கு வராமல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நானோ, திமுகவினரோ வழக்குகளை கண்டு ஓடிவிடமாட்டோம். திமுக பனங்காட்டு நரி; எந்த சலசலப்புக்கும் அஞ்சாது என்றார்.
அதிமுகவுக்கு ஸ்டாலின் நன்றி
மு.க.ஸ்டாலின் மேலும், கூறுகையில், நீதிமன்றத்தில் ஆஜராகவந்த என்னை வரவேற்று திமுகவினர் மட்டுமில்லாது அதிமுக நிர்வாகிகளும் வரவேற்பு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதற்காக அதிமுகவினருக்கு நன்றி என்றார்.