தமிழகம்

தங்கம் விலை ரூ.24,000-ஐ நெருங்குகிறது

செய்திப்பிரிவு

அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால் தங்கத்தின் தேவை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 808-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை உயரும்போதெல்லாம் உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. சென்னையில் 22 காரட் கொண்ட ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 808-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 976 ஆக இருந்தது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 938-க்கு விற்கப்பட்டது. அடுத் தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால், சென்னையில் தியாகராயநகர், மயிலாப்பூர், புரசைவாக்கம், பிராட்வே, தாம்பரம், அடையார் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் நகைக் கடைகளில் வழக்கத்தை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘முகூர்த்த நாட்கள் வருவதால், தங்கத்தின் தேவை கடந்த 2 நாட்களாக 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலையில் உயர்வு ஏற்படுகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.304 உயர்ந்தது. அடுத்த 10 நாட்களுக்கு தங்கத்தின் விலையில் உயர்வு இருக்கும். அதன்பிறகு, ஆடி மாதத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT