கடந்த 7 மாதமாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அம்பாசமுத்திரம் வட்டம் ஜமீன்சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டைகளுடன் வந்து மனு அளித்தனர். அதில், “நூறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்ததற்கான ஊதியம் 17.8.16 முதல் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த 7 மாதமாக ஊதியம் வழங்காததால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராஜவல்லிபுரம்
திருநெல்வேலி ராஜவல்லி புரத்தை சேர்ந்த ஏராளமான பெண் கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து அளித்த மனுவில், “வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாய வேலைகள் இல்லாத நிலையில், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறோம். ஆனால் கடந்த 7 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாட்டாக்குறிச்சி
தென்காசி வட்டாரம் பாட்டாக்குறிச்சி ஊராட்சி முன்னாள் உறுப்பினர் பெ.இசக்கி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்ததற்கான ஊதியம் கடந்த பல மாதங்களாக கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்துஆய்வு செய்து ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலபாப்பாக்குடி பகுதி பெண்களும் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கடந்த 7 மாதமாக ஊதியம் கிடைக்கவில்லை என்று, புகார் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வள்ளியூர்
வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் அ.ஜான்கென்னடி உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்: நூற்றுக்கணக்கான கிராமங்களின் மையப்பகுதியாக வள்ளியூர் அமைந்துள்ளது. ஆனால் இங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி செல்ல வேண்டிய நிலை உள்ளது. காலம், பணவிரயத்தை தவிர்க்கும் வகையில் வள்ளியூரில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளியூர் பகுதியில் விண்ணப்பித்து 4 ஆண்டுகளுக்கு பின் தாலிக்கு தங்கம் வழங்கப் பட்டது. அதன்பின் 4 மாதங்களாகி யும் திருமண உதவித் தொகை வழங்கப்படவில்லை. இதனால் பயனாளிகள் ஏமாற்றத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னத்தூர்
இந்திய கம்யூனிஸ்ட் குன்னத்தூர் கிளைச் செயலாளர் எஸ்.இசக்கிமுத்து உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்:
குன்னத்தூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. ரேஷன் கடையிலும் பொருட்கள் சரியாக பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. குன்னத்தூருக்கு வரும் சாலை சேதமடைந்து, இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. கடந்த 4 மாதமாக இங்குள்ள கழிவுநீரோடைகள் சுத்தம் செய்யப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுடுகாடு கொட்டகை
பாளையங்கோட்டை தாலுகா தருவை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த வி.மகேஷ் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “தருவை பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களுக்கு சுடுகாடு செல்வதற்கு பாலமும் சுடுகாடு கொட்டகையும் அமைத்துத்தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.