கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் பெண் களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வண்ணம் சட்டம் இயற்றப் படும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரேந்திர சிங் கூறியது, அரசியல் மாற்றத்துக்கு வழி வகுக்கும் என்று அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
“பஞ்சாயத்து தேர்தல்களில் பெண் களுக்கு சில மாநிலங்களில் 50 சதவீதமும், சில மாநிலங்களில் 33 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை முறைப்படுத்தும் வகையில், பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வாய்ப்புகள் உள்ளன” என்று மத்திய அமைச்சர் பிரேந்திர சிங் கூறியதை அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
இச்சட்டத்தை முந்தைய ஐமு கூட்டணி அரசு மக்களவையில் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. கிடப்பிலிருந்த அந்த சட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சமூக மற்றும் அரசி யல் ஆர்வலர்கள் கூறிய கருத்துகள்:
காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் பஞ்சாயத்து ராஜ் கல்விக்கான தலைமை பேராசிரியர் ஜி.பழனிதுரை:
பஞ்சாயத்து ராஜ் துறைக்கு மணிசங்கர் அய்யர் அமைச்சராக இருந்தபோது ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, “நாடு முழுவதும் 10 லட்சம் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு களில் இருந்தனர். பெண்கள் பொறுப்பு வகித்த இடங்களில் பொது சுகாதாரம், கிராம மேம்பாடு போன்ற விஷயங்கள் சிறப்பாக இருந்தன. எனவே, அதனை ஊக்குவிக்கத்தான் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடங்களை ஒதுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் வந்தது. ஆனால், பொருளாதாரக் கொள்கை களுக்கே நாடாளுமன்றத்தில் முக்கியத் துவம் அளிக்கப்படுவதால், அத்திட்டம் கிடப்பில் இருந்தது. இந்த சட்டத்தை அமல்படுத்த. அமைச்சர் பிரேந்திர சிங் முயல்வது முற்போக்கான மாற்றமாகும்.
மாதர் சங்க தலைவி உ.வாசுகி:
பஞ்சாயத்து தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடங்கள் வழங்குவதை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதனை நாடு முழுவதும் அமல்படுத்த சட்டம் கொண்டுவருவது நல்ல விஷயம்தான். ஆனால், மனைவி பெயரை பயன்படுத்தி கணவராக இருப்பவர் கோலோச்சுவது மாதிரியான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ஷரத்துகளை இடம்பெறச் செய்ய வேண்டும்.
பாஜக மாநில துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்:
பஞ்சாயத்து தேர்த லில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கது. உள்ளாட்சி அரசிய லில் அடிதடி, வன்முறை போக்கு அதிகரித்துள்ளது என்ற கருத்து உள் ளது. பெண்கள் கைகளுக்கு அதிகாரம் வந்தால், அந்த நிலை மாறி அரசியலில் புதிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி:
பெண்களுக்கு பஞ்சாயத்து தேர்தலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்னும் சட்டத்தை காங்கிரஸ் கட்சிதான் அறிமுகப் படுத்தியது. இப்போது மத்திய அரசு இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.