கோவாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த புதிய ரோந்து கப்பலுக்கு தமிழக காவல் துறையின் கடலோர பாதுகாப்பு குழு ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐசிஜிஎஸ் ஷானாக் என்ற ரோந்து கப்பல் கடந்த மாதம் கோவாவில் நடைபெற்ற விழாவில், கிழக்கு பிராந்திய கடலோர காவல் படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த கப்பல் கோவாவில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் வழியில் நேற்று சென்னை துறைமுகம் வந்தது. அந்த கப்பலுக்கு தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுவின் ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கடற்படை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ஏடிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறும்போது, “புதிய கப்பலான ஐசிஜிஎஸ் ஷானக், 105 மீட்டர் நீளம் கொண்டது. அதில் ஹெலிகாப்டர் மற்றும் 3 படகுகளை நிரந்தரமாக நிறுத்தும் வசதி உள்ளது. இதன்மூலம் ஆபத்தான நிலையில் இருக்கும் மீனவர்களை மீட்க முடியும். கடந்த ஆண்டில் காணாமல் போன 299 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கடலோர காவல்படை மீட்டுள்ளது. தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுவில் 24 அதிவிரைவு படகுகள் உள்ளன. இதன்மூலம் கடத்தல் குற்றங்கள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ கொலை குறித்து முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படைக்கும், தமிழக கடலோர பாதுகாப்பு குழுவுக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம்-ராமேஸ்வரம் இடையே உள்ள 5 கடலோர காவல்படை தளங்கள் தமிழக கடலோர பாதுகாப்பு குழு கட்டுப்பாட்டில் வந்துள்ளன” என்றார்.