மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரான எஸ்.ஆர் கோபியின் பண்ணை வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் துப்பாக்கி, அரிவாள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஆர் கோபி. தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்.
இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர். மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மு.க. அழகிரியின் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை இவர் முன்னின்று செய்தார்.
இந்நிலையில், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன், எஸ்.ஐ.க்கள் சிவசக்தி, ராஜாமணி மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு திடீரென எஸ்.ஆர்.கோபியின் பண்ணை வீட்டுக்குச் சென்றனர். வீடு பூட்டியிருந்ததால் வெளியில் நின்ற கார்களைப் போலீஸார் சோதனையிட்டனர்.
அவற்றில் ஒரு துப்பாக்கி (ஏர் கன்), ஒரு கத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த முருகேசன் என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.
அதைத் தொடர்ந்து எஸ்.ஆர் கோபியின் பண்ணை வீட்டில் சோதனை நடத்த மதுரை மாவட்ட ஜே.எம்.6 நீதிமன்றத்தில் போலீஸார் அனுமதி பெற்றனர். அதன்படி ஏஎஸ்பி சசிமோகன் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை கிராம நிர்வாக அலுவலர் செந்தில் முன்னிலையில் வீட்டிற்குள் சோதனையிட முயன்றனர்.
அப்போது சோதனைக்கு எஸ்.ஆர். கோபி தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம், நீதிமன்ற அனுமதியுடன் வீட்டில் சோதனை நடத்த உள்ளதாகவும், நீங்களாக திறந்து விடாவிட்டால் பூட்டை உடைத்து உள்ளே செல்வோம் எனவும் போலீஸார் கூறினர். இதையடுத்து எஸ்.ஆர் கோபியின் வழக்கறிஞர்கள் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.
வீட்டிற்குள் சோதனை செய்த பின் அங்கிருந்து பணம் எண்ணும் ஒரு இயந்திரம், வெளிநாட்டு மதுபானங்கள் 25 பாட்டில், 2 சீட்டுக்கட்டு, 1 கத்தி, 1 அரிவாள், 1 உருட்டுக்கட்டை ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த 2 கார்கள், ஒரு பைக் ஆகியவற்றையும் போலீஸார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக எஸ்.ஆர் கோபி, நல்லமருது, முருகேசன் உள்பட 4 பேர் மீது ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது, கூட்டுக் கொள்ளையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியது, வெளிநாட்டு மதுபாட்டில்களை சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்திருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் முருகேசனை கைது செய்த போலீஸார், மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘அவனியாபுரம் புறவழிச் சாலையில் எஸ்.ஐ சிவசக்தி தலைமையில் போலீஸார் வியாழக்கிழமை இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு நிற்காமல் சென்ற ஒரு காரை பின்தொடர்ந்து சென்றனர். எஸ்.ஆர் கோபியின் பண்ணை வீட்டுக்குள் சென்றதும், அந்த காரில் இருந்து சிலர் கீழிறங்கி தப்பி ஓடிவிட்டனர். முருகேசன் மட்டும் சிக்கியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.
திடீர் சோதனைக்கு என்ன காரணம்?
மு.க. ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறும் மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், மு.க. அழகிரியின் ஆதரவாளரை குறி வைத்து மதுரை போலீஸார் திடீரென சோதனை நடத்தியது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல், மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்தவர் என்பதால், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் எஸ்.ஆர் கோபி மீது போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் பேச்சு நிலவியது. ஆனால் இந்த இரண்டு கருத்துகளையும் போலீஸார் மறுத்தனர். வாகன தணிக்கையில் கார் நிற்காமல் சென்றதால்தான், எஸ்.ஆர் கோபியின் வீட்டில் சோதனை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.