தமிழகம்

வாழ்வு என்னும் விருட்சம்

அழகு தெய்வானை

வாசுதேவின் ஐம்பது ஆண்டுக் கால ஓவிய வாழ்வைச் சிறப்பிக்கும் வகையில் சென்னையில் ஃபோரம் ஆர்ட் காலரியில் கண்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. இதில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள் தரும் அனுபவம் மகத்தானது.

சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்று, இந்திய அளவில் புகழ்பெற்றவர் மூத்த ஓவியர் எஸ்.ஜி. வாசுதேவ். வெவ்வேறு காலகட்டங்களில் இவர் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவரது ஓவியங்களில் தொடர்ந்து இடம்பெறும் மரத்தையே தலைப்பாக கொண்டு, விருக்ஷா: த ஆர்ட் அண்ட் டைம்ஸ் ஆஃப் வாசுதேவ் என்ற பெயரில் ஒரு நூலும் வெளியிடப்பட்டுள்ளது. வாசுதேவின் நீண்ட நேர்காணலும், அவரது ஓவியங்கள் தொடர்பாக விமர்சகர்கள், நண்பர்களின் அபிப்ராயங்களும் இடம்பெற்றுள்ளன.

சென்னை ஓவியக் கல்லூரி , முதல்வர் கே.சி.எஸ் பணிக்கரின் நிர்வாகத்தில் இருந்த காலத்தை அதன் பொற்காலம் என்று ஓவிய விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். கல்லூரியில் படிக்க நுழையும் அத்தனை மாணவர்களையும் கலைஞர்களாகவே நடத்தினார் பணிக்கர். படைப்பூக்கம், சுதந்திரம், திறந்த உரையாடல் ஆகியவற்றுடன் மாணவர்களும் ஆசிரியரும் பேதமின்றி ஓவியம் பயிலும் சூழலாக அக்காலத்தில் சென்னை ஓவியக் கல்லூரி இருந்துள்ளது. ஓவியர் முனுசுவாமி, ஓவியர் சந்தானராஜ், சிற்பி தனபால் ஆகியோர் அப்போது ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர். மாதந்தோறும் ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் மாணவர்கள் வரைந்த ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் பணிக்கரே இவற்றை மதிப்பிடுவார் என்றும் சொல்கிறார் வாசுதேவ். சில நேரங்களில் ஆசிரியர்களின் ஓவியங்கள்கூடப் புறக்கணிக்கப்பட்டுவிடும். அந்த அளவு சுதந்திரமான ஆரோக்கியமான சூழல் கல்லூரியில் நிலவியது என்கிறார் வாசுதேவ்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தனது ஓவியப் பயணத்தைத் தொடங்கிய வாசுதேவ், அக்காலகட்டத்தில் நிகழ்ந்த மெட்ராஸ் ஓவிய இயக்கத்தில் பங்குபெற்றார். ஆரம்பத்தில் எம்.எப்.ஹூசைன், எச்.எச்.ரஸா, மஞ்சித் பவா, சுனில் தாஸ் ஆகிய ஓவியர்களின் தாக்கம் இவரிடம் இருந்துள்ளது.

பேன்டசி, மைதுனம், ட்ரீ ஆப் லைப், ட்ரீ ஆப் லைப் அண்ட் டெத், ஹியூமன் ஸ்கேப்ஸ், ஹீ அண்ட் ஷீ, எர்த் ஸ்கேப்ஸ், தியேட்டர் ஆப் லைப், ரப்சடி என அவரது ஐம்பது ஆண்டு கலைப் பயணத்தில் தொடர் ஓவியங்களை வரைந்துள்ளார். இந்த தலைப்புகளைப் பார்க்கும்போதே அவரது அணுகுமுறையும், வாழ்க்கை நோக்கும், பயணமும் புலப்படுகின்றன.

மகாபாரதம், ராமாயணம், நாடகங்கள், கன்னட நவீன இலக்கியம், பழங்குடி ஓவியங்களின் தாக்கம் இவரது ஓவியங்களில் உண்டு. நாடகாசிரியர் கிரீஷ் கர்நாட்டும், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கவிஞரான ஏ.கே.ராமானுஜனும் இவருக்கு நண்பர்கள்.

நமது மரபில் வாழ்க்கையை ஒரு விருட்சமாகப் பார்க்கும் நோக்கு இருப்பதை அறிந்துகொள்கிறார் வாசுதேவ். அதுவரை அவரது ஓவியங்களில் தற்செயலாக வந்துகொண்டிருந்த மரங்களுக்கு, ஆழமான ஒரு அர்த்தம் இருப்பது தெரியவர, மரம் மையப் படிமமாக மாறுகிறது.

அவரது மனைவி அர்நவாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த சமயத்தில் ட்ரீ ஆப் லைப் அண்ட் டெத் வரிசை ஓவியங்களை வரைந்துள்ளார்.

வாசுதேவின் ஓவியங்கள், தனித்த புராணிகத்தையும், கதையாடலையும், உலகத்தையும் கொண்டவை. நிஜமான ஒரு முப்பரிமாண வண்ண வெளியில் நடந்து செல்லும் அனுபவத்தைத் தருபவை. இவர் ஓவியங்களில் எதுவும் தனித்துவருவதில்லை. பறவைகளோடு இருக்கும் மரத்தைப் போல, மனிதர்கள் இயற்கையோடு தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். தொலைக்காட்சிகள் மனிதர்களின் உலகத்துக்குள் புகுந்து அவர்களின் அந்தரங்கத்தைத் தொலைத்த துயரம் இவரது சமீபத்திய ஓவியங்களில் முக்கியக் கதைப்பொருளாக உள்ளது.

கற்பனையின் சஞ்சாரம், நிறங்களின் கூடல், எக்களிப்பு, பரவசம், வண்ணங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவை இசையாக மாறும் உணர்வு, பசுமையை அரைத்து ஊற்றியது போன்ற பச்சை வெளி என்று வாசுதேவ் ஓவியங்கள் கொடுக்கும் அனுபவத்தைச் சொல்லலாம். நவீன ஓவியங்கள் கொடுக்கும் காட்சி அனுபவத்தை எழுத்தில் பேசுவது, சங்கடமான விஷயம்தான். ஆனால் வாசுதேவின் ஓவியங்களைத் தொடர்ந்து கவனித்துவருபவர்கள், அவரது ஓவியத்தில் கொண்டுவரும் பொன்னிறமான மிருதுத் தன்மையையும், அவரது ஓவியங்களில் ஆதிக்கம் செலுத்தும் பச்சை, நீலம், சிகப்பு நிறங்களையும் அவரது அடையாளமாகக் கண்டுகொண்டுவிடுவார்கள்.

யானை மேல் நிற்கும் சிறுவன் படிமமும் அழகானது. வாசுதேவ் தன் ஓவியங்களில் உள்ள கற்பனைப் பிரபஞ்சத்தை சொர்க்கத்திற்கு ஒப்பிடுகிறார்.

ஓவியம் வரையும் செயல்பாட்டை உடல் ரீதியான களிப்பும், ஸ்பரிச சுகமும், துய்ப்பும் நிறைந்த அனுபவம் என்கிறார் வாசுதேவ்.

SCROLL FOR NEXT