தமிழகம்

அதிமுகவின் ஆதரவைக் கேட்டுள்ளோம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

செய்திப்பிரிவு

வரும் மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்ததாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர் களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:

முதல்வர் ஜெயலலிதாவை கொடநாட்டில் நானும் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களான கே.பாலகிருஷ்ணன் செளந்தரராஜன் ஆகியோருடன் சென்று சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம். எங்களது கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அதிமுகவிடம் எதுவும் பேசவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணி வர வேண்டும் என்பது எங்களின் கொள்கை. எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைவது நல்லது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கிடையாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அனைத்து மக்கள் விரோதக் கொள்கைகளுக்கும் திமுக ஆதரவாக இருந்துள்ளது.

பாஜகவின் வகுப்புவாத கொள்கைக்கு எதிராக நாங்கள் இருந்து வருகிறோம். ஆனால், திமுக அவ்வாறு இல்லை. இதனால், அவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டோம்.

திட்டமிட்டு வகுப்புவாத கலவரத்தை குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு நடத்தியது. அவ்வாறு உள்ள நிலையில், மோடிக்கு ஆதரவாக வைகோ கருத்து தெரிவித்துள்ளது சரியானது அல்ல என்றார்.

SCROLL FOR NEXT