தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பங்களிப்புடன் 34 ஏரிகளில் பராமரிப்பு பணி தொடக்கம்: குறைதீர்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பங்களிப்புடன் 34 ஏரிகளில் பராமரிப்புப் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக, 10 சதவீதம் தொகையை பாசன வசதிபெறும் விவசாயிகள் செலுத்தவேண்டும் என்று குறைதீர்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராமன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வேளாண் இணை இயக்குநர் அண்ணாதுரை, மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திருகுண ஐயப்பதுரை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

ஆட்சியர் ராமன்

மாவட்டந் தோறும் நீர் நிலைகளை செப்படும் பணி மேற்கொள்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள னர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஏரிகள் புனரமைப்புத் திட்டம் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி உள்ளோம்.

பொதுப் பணித்துறை அதிகாரி

பராமரிப்புப் பணி திட்டத்தின்கீழ், வேலூர் மாவட்டத்தில் 34 ஏரிகளை தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு ஏரியும் ரூ.10 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணி தொடங்க உள்ளது.

இந்தத் திட்டத்தில் 10 சதவீத செலவினத் தொகையை பாசன வசதிபெறும் விவசாயிகள் அல்லது ஏரி நீரை உபயோகிப்பாளர் சங்கத்தினர் செலுத்த வேண்டும். பணம் செலுத்த முடியாதவர்கள் 10 சதவீதம் அளவுக்கு உடல் உழைப்பை ஈடு செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், மதகு பராமரிப்பு, கால்வாய் சரி செய்தல் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபடலாம்.

கால்நடைத்துறை அதிகாரி

வேலூர் மாவட்டத்தில் வறட்சி காலங்களில் தீவனப் பற்றாக்குறை யால் கால்நடைகள் பாதிக்காமல் இருக்க 17 இடங்களில் உலர் தீவன கிடங்குகள் ஏற்படுத்தப்படும். வைக்கோல் 1 கிலோ ரூ.2-க்கு விற்கப்படும். ஒரு மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 3 கிலோ வீதம் உலர் தீவனம் வழங்கப்படும். அதேபோல், 600 ஏக்கரில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

விவசாயி

கூட்டுறவு சங்கங்களில் தடையில்லா சான்று வழங்க பணம் கேட்கிறார்கள். இதுகுறித்து குறைதீர்வுக் கூட்டத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கூட்டுறவு அதிகாரி

எந்த கூட்டுறவு வங்கியிலும் பணம் வாங்குவதில்லை.

விவசாயி

கட்டாயமாக பணம் வாங்குவது குறித்து ஆதாரத்துடன் உங்களிடம் புகார் கொடுத்துள்ளேன். அந்த புகார் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்கள். ஆதாரத்தை மீண்டும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். (இந்த குற்றச்சாட்டுக்கு விவசாயிகள் பலரும் எழுந்து குரல் கொடுத்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது). முடிவில், பணம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றதும் அமைதி ஏற்பட்டது.

விவசாயி

காட்டுப் பன்றியால் விவசாய நிலங்களில் ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு கேட்டால் கிராம நிர்வாக அலுவலரின் சான்றுவேண்டும் என வனத் துறையினர் கூறுகின்றனர். ஆனால், அதுபோன்று இழப்பீடு சான்று வழங்க வருவாய்த் துறையினர் மறுக்கின்றனர்.

அதிகாரி

விவசாய நிலத்தில் எவ்வளவு சேதம் என்ற விவரத்தை மட்டும் வருவாய்த் துறையினர் கொடுக்க முடியும். காட்டுப் பன்றியால் பயிர்ச் சேதம் என்று நாங்கள் சான்று கொடுக்க முடியாது.

ஆட்சியர்

இதுதொடர்பாக பேசி சுமூகத் தீர்வு காணப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

SCROLL FOR NEXT