தமிழகம்

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேச்சு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்பாக முதல்வர் அளித்த பதிலுரை:

கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, இருண்ட தமிழகம் ஒளிமயமாகட்டும் என அறிவித்தேன். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு தமிழகம் ஒளிமயமாக்கப்பட்டுள்ளது. இன்று மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. வீட்டு உபயோகிப்பாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என அனைவருக்கும் தடையின்றி தரமான மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு ஜூன் முதல் மின் வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2008 நவம்பர் முதல் மின் கட்டுப்பாட்டு முறைகளை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது. உயர் அழுத்த தொழிற்சாலைகள், வணிக மின் பயனாளிகளுக்கு 40 சதவீதம் மற்றும் மாலை 6 முதல் 10 மணி வரை 95 சதவீதம், குறைவழுத்த தொழிற்சாலைகள், வணிக பயனாளிகளுக்கு 20 சதவீதம், மாலை 6 மணி முதல் 10 மணி வரை 95 சதவீதம் என மின் வெட்டு இருந்தது. பொதுமக்களுக்கு நினைத்த நேரத்தில் எல்லாம் மின் வெட்டு என்ற நிலை ஏற்பட்டது.

கடந்த 2011-ல் அதிமுக அரசு பொறுப்பேற்ற பின், பல்வேறு திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டன. வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்ட்டது. வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டுவர, மின் வழித்தடம் வேண்டும்.

வட மாநிலத்தில் உள்ள மின்சாரத்தை இங்கே பெற வழித்தடம் அமைக்க தமிழக அரசு வலியறுத்தியது. இதனால், மகாராஷ்டிராவின் சோலாப்பூர்- திருவலம், நரேந்திரா- கோலாப்பூர் இடையே 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் நாம் மின்சாரம் பெற முடிகிறது.

இங்கே நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மத்திய அரசு திட்டங்களில் இருந்து நமக்கான பங்கு, நீண்டமற்றும் நடுத்தர கால மின் கொள்முதல் மூலம் பெறப்படும் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் ஆகியவை மூலம் 8 ஆயிரத்து 432.5 மெகாவாட் மின்சாரம் கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக பெறப்பட்டுள்ளது.

எனவே, தனியாரால் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்தில் தான் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் நீக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின் திறன், 3 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் திறன் அலகுகள் கூடுதலாக நிறுவப்பட்டு தமிழகத்தின் மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்'' என்றார் ஜெயலலிதா.

SCROLL FOR NEXT