சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அறிவித்துள்ள குறைந்த விலை வீட்டு மனைகளை வாங்க பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 5 ஆயிரம் மனுக்களுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் மணலி மற்றும் மறைமலை நகரில் குறைந்த விலை வீட்டு மனைகளை விற்க சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடசென்னையில் மணலி புதுநகர் மற்றும் தென்சென்னை புறநகர்ப் பகுதியில் மறை மலைநகர்/கூடலூர் பகுதிகளில் புதிய வீட்டுமனைகளை சி.எம்.டி.ஏ. உருவாக்கியுள்ளது.
இதில் பொருளாதாரத்தில் நலவிடைந்த பிரிவினர், குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கென தனித்தனி மனைப்பிரிவுகளை உருவாக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட இரண்டு இடங்க ளிலும் சுமார் 200 மனைகள் உரு வாக்கப்பட்டுள்ளன. மறைமலை நகரில் 300 சதுர அடி (ரூ.417-சதுர அடி) தொடங்கி, 3 ஆயிரம் சதுர அடி வரையிலான மனைகளும், மணலியில் 420 சதுர அடி (ரூ.706) தொடங்கி 3600 சதுர அடி வரை மனைப்பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மனைப்பிரிவுக்கு ஏற்ப விலை மாறும். ரூ.2.96 லட்சம் முதல்
ரூ.20 லட்சம் வரையில் மனைகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.
வீட்டுமனை விற்பனை அறிவிப்பு வெளியானது முதல், அதற்கான மனுக்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கான மனுக்கள் வினியோகிக்கப்படும், எழும்பூர் தலைமை அலுவலகத்தின் முதல் மாடியில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் நின்று மனுக்களை பொதுமக்கள் நம்பிக்கையுடன் வாங்கிச் செல்கிறார்கள்.
இது குறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், “அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மனுக்களை வாங்கியுள்ளனர். இது ஒரு லட்சத்தைத் தாண்டும் என கருதுகிறோம். சென்னைக்கு அருகில் எனக் கூறி விற்பனை செய்யப்படும் பல தனியார் மனைகளில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும். அணுகுசாலைகள் இருக்காது. ஆனால் பல லட்சம் செலவில் எங்கள் மனைகளை மேடாக்கி குடிநீர், கழிவுநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களிடையே கடும் கிராக்கி ஏற்படுகிறது என்றார் அவர்.