தமிழகம்

உர சப்ளை டெண்டர் ஒத்திவைப்பு: பின்னணியில் ‘கட்டிங்’ பேரம்?

குள.சண்முகசுந்தரம்

கரும்பு, வாழை விவசாயத்துக்கான நீரில் கரையும் உரங்கள் சப்ளை செய்யும் டெண்டர் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னணியில் பேரம் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தமிழக விவசாயிகளுக்கு நீரில் கரையும் உரங்கள் வழங்க மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குகிறது. இதைக் கொண்டு கரும்பு, வாழை விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் நீரில் கரையும் உரங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான நிதி, மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டு, வேளாண் துறை மூலம் உரம் இறக்குமதி செய்து சப்ளை செய்வதற்கான டெண்டர் விடப்படும்.

இந்த ஆண்டில் இதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. இதையடுத்து, உரம் சப்ளை செய்ய நான்கு மாதங்களுக்கு முன்பு டெண்டர் கோரப்பட்டது. என்ன காரணத்தாலோ அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் இரண்டு முறை வைக்கப்பட்ட டெண்டரும் முறையான காரணம் தெரியாமலேயே ரத்து செய்யப்பட்டன. நவம்பர் 27-ல் நான்காவது முறையாக டெண்டர் நடத்தப்போவதாக அறிவித்திருக்கி றார்கள்.

இதுகுறித்து கொங்கு மண்டல உர விற்பனையாளர்கள் சிலர், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நீரில் கரையும் உரங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கான டெண்டரில் கலந்துகொள்ளும் கம்பெனிகள் இறக்குமதிக்கான லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 500 டன் உரம் இறக்குமதி செய்துகொடுக்கும் தகுதி இருக்க வேண்டும். ஓராண்டுக்காவது அரசின் ஆர்டரை எடுத்து உர சப்ளை செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் வைத்திருக்கிறார்கள். டெண்டருக்கு வரும் பல கம்பெனிகளுக்கு இந்தத் தகுதிகள் இருப்பதாகத் தெரிய வில்லை. முன்கூட்டியே ‘பேசி முடித்து’ விடுவதால் இவர்கள் தரும் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை யாரும் சோதிப்பதில்லை.

வெளி மார்க்கெட்டில் இந்த உரம் தற்போது கிலோ ரூ.70-க்கு கிடைக்கிறது. ஆனால் அரசுக்கு சப்ளை செய்ய, கடந்த ஆண்டே ரூ.97க்கு டெண்டர் விடப்பட்டது. இந்த ஆண்டு ரூ.130-க்கு சப்ளை செய்யும் படி அதிகாரிகளே கம்பெனிகளுக்கு யோசனை சொல்லி இருக்கிறார்கள். இந்தத் தொகையில் 30 சதவீதத்துக்கு மேல் ‘கட்டிங்’காக பேசப்படுகிறது. பேரம் படியாததால்தான் மூன்று முறை டெண்டர் ரத்தாகி இருக்கிறது. இன்னமும் பேரம் நடப்பதாக அதிகாரிகளே சொல்கிறார்கள். அதனால், 27-ம் தேதி டெண்டர் நடக்குமா என்பதும் நிச்சயமில்லை என்கின்றனர் உர விற்பனையாளர்கள்.

அதிகாரிகள் தரப்பில் கேட்டால், ‘‘வழக்கமாக முந்தைய ஆண்டைவிட 1.5 சதவீதம் மட்டுமே கூடுதல் விலை நிர்ணயம் செய்ய முடியும். இந்த முறை 30 சதவீதத்துக்கும் கூடுதலாக டெண்டர் போடப்பட்டிருந்ததால் முதல் முறை டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அடுத்தடுத்த டெண்டர்கள் தொடர்பாக உரம் சப்ளை செய்யும் கம்பெனிகள் தரப்பிலிருந்து சில புகார்கள் வந்ததால் அவையும் ரத்து செய்யப்பட்டன’’ என்கிறார்கள்.

இப்பிரச்சினை தொடர்பாக உர விற்பனையாளர்கள் மேலும் கூறுகையில், ‘‘காலத்தே உரம் கிடைத்தால்தானே விவசாயிக்கு பயன். ஆனால், இப்படியே டெண்டரை மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து மார்ச் வரை காலம் கடத்திவிடுவார்கள். கடைசியில், அவர்களுக்கு சரிப்பட்டு வரும் ஏதாவது மூன்று கம்பெனிகளுக்கு டெண்டர் கொடுப்பார்கள். நிர்ண யிக்கப்பட்ட அளவுக்கு அவர்கள் உரம் சப்ளை செய்தார்களா என்று விசாரித்தால், இறக்குமதி கணக்குக்கும் சப்ளை கணக்குக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கும். இதையெல்லாம் யார் கேட்பது?” என்றனர்.

SCROLL FOR NEXT