தமிழகம்

நதி நீர் பாதுகாப்பு கமிட்டியை தமிழக அரசு அமைக்க வேண்டும்: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 'நதி நீர் பாதுகாப்பு கமிட்டி' ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம், திம்பம் பகுதியை அடுத்துள்ள கங்குந்தியில் ஆந்திர அரசு உயர் மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகளை ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.

இதுகுறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''குப்பம் - கங்குந்தி இடையில் பாலாறு பாயும் 1 கிலோ மீட்டரில் உள்ள தரைப்பாலத்தை மாற்றி, ரூ.4.5 கோடி செலவில் உயர்மட்டப் பாலமாக கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆகிய ஆறுகள் மூலம் வர வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களோடு, நதி நீர் பிரச்னையைப் பொறுத்தவரையில் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்க்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரியது. குதிரை பேரம் நடத்தி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு நிலையற்ற, செயலற்ற ஆட்சி தமிழகத்தில் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில், நதி நீர் பிரச்சினைகளை கண்காணித்து, உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 'நதி நீர் பாதுகாப்பு கமிட்டி' ஒன்றை அமைக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அந்தப் பணியை உடனடியாக மேற்கொண்டு இதுபோன்ற சூழ்நிலைகளை தடுக்க வேண்டும், என்று நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

தற்போது கங்குந்தியில் தரைமட்டப்பாலம் என்று தெரிவித்தாலும், வருங்காலத்தில் தடுப்பணையாக மாற்றப்படும் என்ற அச்சம் விவசாயப் பெருங்குடி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், தமிழக அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரையில் நல்லது – கெட்டது எதுவானாலும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஒருமனதாக முடிவெடுத்து, அதனை செயல்படுத்துகிறார்கள். ஆனால், அதிமுக ஆட்சியைப் பொறுத்தவரையில் கடந்த ஆறாண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தினை கூட்டவில்லை.

திமுக ஆட்சியின் போது தலைவர் கருணாநிதி இதுபோன்ற சூழ்நிலைகளில் அனைத்துக் கட்சி கூட்டங்களை கூட்டி, கருத்துகளை கேட்டு முடிவெடுத்தது மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு அவரே நேரில் சென்று அந்த மாநில முதல்வர்களுடன் நேரடியாகப் பேசுவது, சம்பந்தப்பட்ட அமைச்சர்களை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துப் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பார்.

ஆனால், இன்றைக்கு உள்ள ஆட்சி அப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது'' என்று ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT