அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பாமல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் புறக்கணிப்பதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது.
இந்நிலையில் அரசு விழாக்களுக்கு தங்களை அழைக்காமல் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக 6 எம்.எல்.ஏ.க்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமீபத்தில் பேச்சிப்பாறை அணையில் நடைபெற்ற தண்ணீர் திறப்பு நிகழ்வுக்கு சம்பந்தப்பட்ட தொகுதியின் எம்.எல்.ஏ மனோ தங்கராஜுக்கு அழைப்பு விடுக்கப் படவில்லை என்று புகார் கூறப்பட்டது.
நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் நடை பெற்ற அரசு விழாவின்போது எம்.எல்.ஏ சுரேஷ்ராஜனோடு சேர்ந்து நிகழ்வில் கலந்து கொள்வதை ஆட்சியர் தவிர்த்ததாக சர்ச்சை கிளம்பியது. அங்கு திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வளர்ச்சிப் பணிகளில் தனக்கு அரசு அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்காததைக் கண்டித்து கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ ஆஸ்டின் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏ.க்களை ஆட்சியர் புறக்கணிப்பதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அவைத் தலைவர் ஜோசப் ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் அரசு விழாக்களில் தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளும் மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தவும் திமுக தயாராகி வருகிறது.
இக்குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அரசு உயர் அதிகாரிகளோ, ‘’ஆட்சியர் அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்கிறார். எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கை மனுக்களுக்கு துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்து ரை செய்து வருகிறார்” என்கின்றனர்.