சென்னை மண்டல திரைப்பட தணிக்கைக் குழு முன்னாள் அதிகாரி பாபு ராமசாமி இதயக் கோளாறு காரணமாக காலமானார். அவருக்கு வயது 64.
மத்திய அரசின் திரைப்பட தணிக்கைக் குழுவின் சென்னை மண்டல அதிகாரியாக 2005-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை பணியாற்றிவர் பாபு ராமசாமி. இந்த காலகட்டத்தில் இவர் 13,500 திரைப்படங்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சாதனை படைத்துள்ளார். இதில் தமிழ் மொழித் திரைப்படங்கள் மட்டுமன்றி வெளிநாட்டு மொழிமாற்ற திரைப்படங்களும் அடங்கும்.
கோவை மாவட்டம் ஆனைமலையை பூர்வீகமாக கொண்டவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களின் ஏற்பாட்டு பொறுப்புகளை கவனித்தார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே உயிர் பிரிந்தது.
திரையுலகம் சார்ந்த அரசுப் பணியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது பங்களிப்பை செலுத்திய பாபு ராமசாமி, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அவர் தயாரித்த ‘களரிஸ் ஆஃப் கேரளா’, ‘எ பியூ திங்ஸ் அபவுட் ஹெர்’ ஆகிய திரைப்படங்கள் குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.