சுவாதியை கொலை செய்தவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பெண் பொறியாளர் சுவாதி(24) வெட்டி கொலை செய் யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசா ரணை நடந்து வருகிறது. சுவாதி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது தெரி யாததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான கொலைகளில் குற்றவாளிகளின் செல்போன் பேச்சை வைத்தே அவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். ஆனால் சுவாதி வழக்கில் அவரது செல்போன் எண் மூலம் எந்த தகவலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. அவரது செல்போனையும் கொலையாளி எடுத்துச் சென்றுவிட்டார். இதனால் செல்போனில் இருக்கும் வாட்ஸ்-அப், வைபர், ஐஎம்ஓ போன்ற தகவல் தொடர்பு அப்ளிகேஷன்களில் என்னென்ன பேசப்பட் டுள்ளன. செல்போனில் புகைப்படங்கள் எதுவும் இருக்கிறதா? போன்ற எந்த தகவலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.
கர்நாடக மாநிலத்தவரா?
கொலையாளி பயன்படுத்திய அரிவாள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆகிய இரண்டை மட்டுமே வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி பயன்படுத்திய அரிவாள் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் குறிப்பிட்ட சமூகத்து மக்கள் பயன்படுத்துவது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரூ, பெங்களூரூவில் சுவாதி பணியாற்றியுள்ளார். எனவே அப்போது அவரை யாராவது ஒருதலையாக காதலித்து, அதை சுவாதி நிராகரித்து இருக் கலாம் என்று கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட நபர் சுவாதியை பின்தொடர்ந்து வந்து அவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது.
எனவே, கர்நாடக மாநிலத்திலும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒத்துழைப்பு இல்லை
சுவாதி கொலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. அவர்கள் மேலும் சில தகவல்களை கூறினால் குற்றவாளியை கண்டு பிடிக்க வசதியாக இருக்கும். சுவாதியின் நண்பர்கள் 2 பேர் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். அதை வைத்தே தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுவாதி தோழி ஒருவரின் முகநூல் நண்பர் அவரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்திருக்கிறார். சுவாதியைக் கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் அவரைப்போலவே இருப்பதாக தோழி கூறியிருக்கிறார். போரூரில் இருந்த அந்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல பூந்தமல்லியைச் சேர்ந்த மற்றொரு நபரையும் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யாரையும் கைது செய்யவில்லை
“சுவாதி கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலையாளி கைது செய்யப்பட்டுவிட்டார் என்ற தகவல்களில் உண்மை இல்லை. இந்த கொலை வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை” என்று சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் புதிய படத்தை போலீஸார் நேற்று வெளியிட்ட னர். அதை அனைத்து காவல் நிலையங்களுக்கும், கர்நாடக மாநில காவல் துறைக்கும் போலீஸார் அனுப்பியுள்ளனர். சந்தேக நபரின் இன்னும் தெளிவான படத்தை ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகம் மூலம் தயார் செய்து வருவதாகவும் போலீஸார் கூறி யுள்ளனர்.
சுவாதியை அடித்த இளைஞர்: நேரில் பார்த்தவர் தகவல்
சுவாதி கொலை செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஓர் இளைஞர் அவரை அடித்திருக்கிறார்.
இதை நேரில் பார்த்த நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தமிழ்ச் செல்வன் கூறும்போது, "நான் தினமும் அதே ரயிலில்தான் செல்வேன். மகளிர் பெட்டியில் ஏறுவதற்காக சுவாதி அந்த இடத்தில் வந்து உட்கார்ந்து இருந்தார். அடுத்த பெட்டியில் ஏறுவதற்காக நான் காத்திருந்தேன். ரயில் நிலையத்தில் சுமார் 7 பேர் இருந்திருப்போம். அப்போது ஒரு இளைஞர் வந்து சுவாதியிடம் பேசினார். திடீரென அந்த நபர் சுவாதியை கன்னத்தில் அடித்து விட்டார். மேலும் அவரை பலமுறை தாக்கினார். இதில் சுவாதி நிலை குலைந்து விட்டார். அவரது செல்போனும் கீழே விழுந்துவிட்டது. அந்த நேரத்தில் ரயில் வரவே கீழே விழுந்த செல்போனை எடுத்துக்கொண்டு சுவாதி ரயிலில் ஏறிச் சென்றுவிட்டார்.
சுவாதியை கொலை செய்ததாக போலீஸார் வெளியிட்டுள்ள சந்தேக நபரை போலவேதான், சுவாதியை தாக்கிய நபரும் இருந்தார். சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் நானே போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த தகவல்களை தெரிவித்தேன்" என்றார்.