தமிழகம்

தி இந்து செய்தி எதிரொலி: பட்டினப்பாக்கம் வழிப்பறி சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்; படுகாயமடைந்த நஜ்ஜூவின் உயர் சிகிச்சைக்கு முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து பட்டினப்பாக்கம் வழிப்பறி சம்பவத்தில் உயிரிழந்த நந்தினி மற்றும் சேகர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நஜ்ஜூவுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் மற்றும் உயர் சிகிச்சை வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பட்டினப்பாக்கத்தில் கடந்த 4-ம் தேதி இரவு நடந்த வழிப்பறி சம்பவத்தின்போது ஏற்பட்ட விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நந்தினி என்ற பெண்ணும், அப்பகுதியில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த சேகர் என்பவரும் உயிரிழந்தனர். நந்தினியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நஜ்ஜூ என்ற கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். இந்நிலையில் விபத்தில் காயமடைந்த நஜ்ஜூவின் பேட்டி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் நேற்று வெளியானது. இந்த பேட்டியில், நந்தினியின் குடும்பத்துக்கும், தனது மருத்துவ சிகிச்சைக்கும் முதல்வர் உதவி செய்ய வேண்டும் என்று நஜ்ஜூ கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பட்டினப்பாக்கம் வழிப்பறி சம்பவத்தில் நந்தினி உயிரிழந்த செய்தியையும், வழிப்பறி செய்தவர்களின் இருசக்கர வாகனம் மோதி சேகர் உயிரிழந்த செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இருவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்துள்ள நஜ்ஜூ பூரண குணம் அடையும் வகையில் உயரிய சிகிச்சை அளித்திட உத்தரவிட்டுள்ளேன். இதைக் கண்காணித்து உறுதி செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் வி.சரோஜா ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நந்தினி, சேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நஜ்ஜூவுக்கு ரூ.1 லட்சமும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

தனி அறையில் சிகிச்சை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து மயிலாப்பூர் வட்டாட்சியர் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள், நஜ்ஜூவை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தனி அறையில் தங்க வைத்தனர். அங்கு அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் வி.சரோஜா, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதை நேரில் ஆய்வு செய்தனர்.

நஜ்ஜூவுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து, அம்மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஜி.ஷீலா ராணி கூறும்போது, “நஜ்ஜூவின் வலது இடுப்பு பகுதியில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ராயப்பேட்டை மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்திருக்கிறோம். அதன் அறிக்கையைத் தொடர்ந்து உரிய சிகிச்சை வழங்கப்படும். பல்வேறு துறை மருத்து வர்களும் அவரைத் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்” என்றார்.

முதல்வருக்கு நன்றி

இது தொடர்பாக நஜ்ஜூவின் தாய் லதா கூறும்போது, “கடந்த 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ராயப்பேட்டை மருத்துவமனையில் நஜ்ஜூ அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திருப்தி இல்லாத தால், 9-ம் தேதி நஜ்ஜூவை வீட்டுக்கு அழைத்துச்சென்று, இயற்கை வைத்தியம் கொடுத்துவந்தோம். அவளால் வலது காலை அசைக்க முடியவில்லை. அதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். போதிய வருவாய் இல்லாததால், அடுத்தகட்ட சிகிச்சைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருந்தேன்.

இந்நிலையில் முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து தற்போது நஜ்ஜூவுக்கு உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. என் மகள் விரைவில் எழுந்து நடப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு எங்கள் குடும்பம் சார்பிலும், நந்தினியின் குடும்பம் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நஜ்ஜூ கூறும்போது, “எனது கோரிக்கையை ஏற்று நந்தினி குடும்பத்துக்கும் எனக்கும் நிவாரணம் வழங்கிய முதல் வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை திருப்தி அளிக்கிறது” என்றார்.

நந்தினியின் தம்பி நன்றி

முதல்வரின் அறிவிப்பு தொடர்பாக நந்தினியின் தம்பி வி.விக்னேஷ் கூறும்போது, “எத்தனை கோடி கொடுத்தாலும், எனது அக்காவின் உயிருக்கு இணை ஆகாது. முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்ததை விட, எங்கள் துயரத்தில் அவரும் பங்கெடுத்துக்கொண்டு, இரங்கல் தெரிவித்திருப்பது மனநிறைவைத் தருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT