தமிழகம்

உதகையில் சிறுத்தை அச்சுறுத்தல்: ஒரே வாரத்தில் இருவர் பலி

செய்திப்பிரிவு

உதகையில் அட்டபெட்டு பகுதியில் சிறுத்தை தாக்கி பலியான நபரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய ஆண் ஒருவர் நேற்று மாலை விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் அவரை அவரது உறவினர்கள் தேடினர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அவரது சடலம் இன்று அட்டபெட்டு பகுதியில் இருந்து 7 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பாதி உடல் சிறுத்தையால் உண்ணப்பட்டு கிடந்த சடலத்தை வனத்துறையினர் மீட்டனர்.

கடந்த 4-ஆம் தேதி சோலாடா கிராமத்தில் பெண் ஒருவர் சிறுத்தை தாக்கி பலியானார். ஒரே வாரத்தில், இரண்டு பேர் சிறுத்தைப் புலிக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் நிதி:

உதகமண்டலம் சோலாடா பகுதியைச் சேர்ந்த கவிதா சிறுத்தைப் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்திற்கு வனத் துறை மூலம் 3 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்: நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம், தூனேரி கிராமம், சோலாடா என்ற பகுதியைச் சேர்ந்த திரு. ரவி என்பவரின் மனைவி கவிதா 4.1.2014 அன்று தொட்டப்பெட்டா வனப் பகுதி அருகே சிறுத்தைப் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்த செய்தி மிகுந்த துன்பத்தில் ஆழ்த்தியது.

சிறுத்தைப் புலி தாக்கியதில் அகால மரணமடைந்த கவிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கவிதாவின் குடும்பத்திற்கு வனத் துறை மூலம் மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT