பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகும் நிலையில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ. 250 கோடிக்கு மது விற்பனை செய்ய, தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தாராள மான மது விற்பனைக்கு வசதியாக ஒவ்வொரு கடையிலும், 15 நாட் களுக்கு தேவையான மது இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
நியாயவிலைக் கடைகளில் அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவையான அளவுக்கு இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டாத அரசு, மது வகைகளை இருப்பு வைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம், தமிழகத்தில் அதிகரித்த பிறகுதான், இளைஞர்களின் மது அருந்தும் பழக்கமும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 14 முதல் 19 வயது வரையுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் 65 சதவிகிதத்தினர் மது அருந்துவதாக, அசோசெம் அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங் களின் போது தான், அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. புத்தாண்டையொட்டி நிகழும் பாலியல் குற்றங்களுக்கும் மது தான் காரணமாகிறது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று அறிவுறுத்தும் அரசு, இன்னொரு புறம் மதுக்கடைகளை திறந்து வைத்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது முரண்பாடுகளின் உச்சமாகும்.
அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கூட புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மக்கள் நலன்கருதி டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை, மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்றார்.