தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை முற்றிலும் விலகி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளி மண்டலத்தில் உருவான சுழற்சியால் தமிழகத்தில் பல இடங்களில் மழை நீடிக்கிறது. இந்த மழை அடுத்த 24 மணி நேரத்து தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் உள்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவ மழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய தகவலில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, " இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் வங்க கடலில் உருவான காற்று சுழற்சி மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மையம் கொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுதிகளின் பரவலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை முற்றிலும் விலகி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மழை தொடர்ந்த நிலையில் அங்கு தென்மேற்கு பருவ மழை அடுத்த சில நாட்களில் விலகும்" என்று தெரிவிக்கப்பட்டது.
வளி மண்டல சுழற்சியால் தமிழகத்தில் அனேக இடங்களில் இன்றும் மழை பெய்து வருகிறது. மேலும், வானிலை ஆய்வு மைய தகவலின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பலன் தராமல் போனதால், தற்போது ஆரம்பித்துள்ள வடகிழக்கு பருவ மழை வெப்பநிலையை தணிய செய்யும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் அதை சுற்றிய பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கன மழை பெய்தது. இன்று காலை முதல் லேசான தூரல் இருந்து வந்தது. பின்னர் பிற்பகல் வேளைகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது.