தமிழகம்

‘வியட்நாம் வீடு’ சுந்தரம் காலமானார்: திரையுலக கலைஞர்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

திரைப்பட வசனகர்த்தாவும், இயக்குநருமான ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 76.

தமிழ் திரையுலகில் வசன கர்த்தா, நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் சென்னையில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு காலமானார். அவர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு செல்லம் என்ற மனைவியும், அனு, ஸ்வேதா ஆகிய மகள்களும் உள்ளனர். இவர்களில் அனு திரைப்படத்துறையில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

டன்லப் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், நாடகத்தின் மீதுள்ள ஆர்வத்தால் ஒய்.ஜி.பார்த்த சாரதியின் ‘யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்’ நாடகக் குழுவில் காஸ்ட்யூம் கன்ட்ரோலராக இருந்தவாறு கதைகளையும் எழுதிவந்தார். இவரது நாடகங்கள் பலவும் திரைத்துறையினரை கவர்ந்தன.

கடந்த 1970-ம் ஆண்டு சிவாஜியின் நடிப்பில் வெளியான ‘வியட்நாம் வீடு’படத்தின் மூலம் கதை, வசனகர்த்தாவாக அவர் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘ஞானஒளி’, ‘கிரகபிரவேசம்’ உள்ளிட்ட 200 படங்களுக்கு மேல் அவர் கதை வசனம் எழுதினார். தமிழில் எந்த ஒரு வசனகார்த்தாவுக்கும் அவர் திரைக்கதை, வசனம் எழுதிய படத்தின் பெயர் அடைமொழியாக ஆனதில்லை. அந்த பெருமை ‘வியட்நாம் வீடு’ சுந்தரத்துக்கு உண்டு.

‘கண்ணன் வந்தான்’ நாடகத்தை ‘கௌரவம்’ என்ற தலைப்பில் சிவாஜி, இரு வேடங்களில் நடிக்க இயக்கியதன் மூலம் இயக்கத்திலும் கால் பதித்தார் சுந்தரம். மேலும் வியட்நாம் மூவிஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ரங்கராஜனுடன் இணைந்து அந்தப் படத்தை தயாரித்ததன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். ‘கௌரவம்’ படத்தைத் தொடர்ந்து ‘பயணம்’, ‘விஜயா’, ‘தேவி கருமாரியம்மன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

சிவாஜிகணேசனின் பல படங்களில் பணியாற்றியதால் இவர் சிவாஜியின் ‘செல்லப்பிள்ளை’ என்றும், ஆஸ்தான கதாசிரியர் என்றும் இவரை எம்.ஜி.ஆருக்கு பிடிக்காது என்றும் அப்போது பரவலாக பேச்சு உண்டு. ஆனால் இதை பொய்யாக்கும் விதத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘நாளை நமதே’ உள்ளிட்ட சில படங்களிலும் வசனம் எழுதினார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் பணியாற்றினார். ‘மைடியர் பூதம்’, ‘ரிஷிமூலம்’, ‘கிருஷ்ணதாசி’, ‘மெட்டி ஒலி’ உள்ளிட்ட பல தொட ர்களில் நடித்துள்ளார். அண்மை காலம் வரை பல சின்னத்திரை தொடர்களின் கதை இலாகா பிரிவில் பணியாற்றியுள்ளார்.

அஞ்சலி

‘வியட்நாம் வீடு’ சுந்தரம் உடலுக்கு, திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமன், வசனகர்த்தா சித்ராலயா கோபு, நடிகர்கள் சிவக்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், சூர்யா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், மோகன்ராமன், நடிகைகள் வடிவுக்கரசி, குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், இசையமைப்பாளர் பிரியா உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் நேற்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

‘வியட்நாம் வீடு’ சுந்தரத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரையுலகம் கண்ட மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ‘வியட்நாம் வீடு’ சுந்தரமும் ஒருவர். 10-க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார். ‘வியட்நாடு வீடு’ திரைப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது, அறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ள அவர், எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். அவரது மறைவு தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு பேரிழப்பாகும்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT