தருமபுரி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி செல்லும் கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில், "திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி செல்லும் கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 12.10 மணியளவில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி எனும் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது ரயிலை நிறுத்துவதற்கான சிக்னல் விழுந்துள்ளது.
இதனையடுத்து ஓட்டுநர் ரயிலை நிறுத்தியிருக்கிறார். 40 நிமிடங்கள் ஆகியும் சிக்னல் மாறததால் சந்தேகம் அடைந்த ரயில் ஓட்டுநர் அருகிலிருந்த மொரப்பூர் ரயில் நிலையத்தை தனது வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டார். ரயில் நிலையத்திலிருந்த பணியாளர்கள் தாங்கள் ஏதும் சிக்னல் போடவில்லை எனக் கூறவே ஏதோ தவறு நடந்திருப்பது இருதரப்புக்கும் புரிந்தது. ரயில் போலீஸ் மற்றும் தருமபுரி போலீஸாருடன் தொட்டம்பட்டிக்கு விரைவதாகக் கூறினர்.
அதேவேளையில், முன்பதிவு பெட்டி ஒன்றிலிருந்து மக்கள் கூச்சலிடுவது கேட்டது. அங்கே சென்று விசாரித்தபோது மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பயணிகளிடமிருந்து நகைகளைப் பறித்துச் சென்றதாகக் கூறினர். 5 பயணிகளிடம் 15 பவுன் நகைகள் பறிக்கப்பட்டதாகக் கூறினர். இது தொடர்பாக ரயில்வே போலீஸாரும், தருமபுரி போலீஸ் எஸ்.பி. கங்காதர் தலைமையிலான போலீஸாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.
ரயிலில் கொள்ளை போன நகை, பணம், பொருட்கள் எவ்வளவு என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்ட கும்பல் கைவரிசையா?
ரயில் சிக்னலை உடைத்து பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் நக்சல்கள் போன்ற போராட்டக் கும்பல் கைவரிசை இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.