மனைவி வருவாய் ஈட்ட வேண்டும் என எதிர்பார்ப்பது நினைப்பது இந்துமத கோட்பாடுகளுக்கு எதிரானது என ஜீவனாம்ச வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
மதுரை குடும்ப நீதிமன்றம் கடந்த நவம்பர் 5-ம் தேதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி பி.தேவதாஸ் இக்கருத்தினை தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட நபர் அவரது மனைவிக்கும், மகளுக்கும் தலா ரூ.5000 வீதம் பிரதி மாதம் தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு விவரம்:
மனைவியை விவாகரத்து செய்த மத்திய அரசு ஊழியர் ஒருவர் அவரது மனைவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து போதிய அளவு ஊதியம் பெருவதால் அவருக்கு ஜீவனாம்சம் தர நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை தரும்பப் பெற வேண்டும் எனக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, "நீங்கள் சொல்வதுபோல் உங்கள் மனைவி வேலை பார்க்கிறார் என்பதை உறுதிப்படுத்த போதிய ஆதாரம் இல்லை. மேலும் இந்து மதச் சட்டத்தின்படி ஒரு கணவன் தனது மனைவியை பேண வேண்டும். ஓர் இந்து கணவன் தனது மனைவி வேலைக்குப் போய் தன்னைத் தானே பேணிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. அதேபோல் ஓர் இந்து ஆண் திருமணம் செய்து கொள்ளும்போது உனக்கான பணத் தேவைகளை நீயே வேலை பார்த்து கவனித்துக் கொள்வதாயின் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என நிர்பந்திப்பதில்லை. அப்படி கூறினால் அது இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானதாக இருக்கும்.
மேலும், மனுதாரர் மத்திய அரசு ஊழியராக இருக்கிறார். மாதம் ரூ.23,000 சம்பாதிக்கிறார். எனவே வருமானம் குறைவு என அவர் காரணம் சொல்லி ஜீவனாம்சம் அளிப்பதில் இருந்து விலக்கு கோர முடியாது. மத்திய அரசு ஊழியர்கள் வருவாய் ஆண்டுதோறும் ஏற்றப்படுகிறது. அவர்கள் டி.ஏ. ஆறு மாதத்துக்கு ஒரு முறை உயர்கிறது. எனவே ஜீவனாம்சம் தருவதிலிருந்து அவர் விலக்கு கோர முடியாது. அதுபோலவே தன்னை நம்பி தாய், விதவை தங்கை இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அவர்களைப் பேணுவதில் மனுதாரரின் சகோதரரின் பங்களிப்பும் இருக்கிறது.
மதுரையில் ஒரு பெண் ரூ.5000 வருவாய் ஈட்டினால் அது அவர் கைக்கும் வாய்க்கும் எட்டும் அளவுக்கே இருக்கும். அதை வைத்துக்கொண்டு அவரது குழந்தையை சரிவர பராமரிக்க முடியாது.
எனவே மனுதாரர் அவரது மனைவிக்கும், மகளுக்கும் தலா ரூ.5000 வீதம் பிரதி மாதம் தர வேண்டும்" எனத் தீர்ப்பு வழங்கினார்.